மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் ஆனி மாத சனி மகாப்பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் நேற்று நடைபெற்ற ஆனி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு மூலவர் சோமநாதர் சுவாமிக்கும், நந்தி பெருமானுக்கும் 11 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து உற்சவர் சோமநாதர் ஆனந்தவல்லி அம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார்.பின்னர் பக்தர்கள் வாகனத்தை தூக்கி கொண்டு கோயிலின் உட்பிரகாரத்தை சுற்றி 3 முறை வலம் வந்தனர். அப்போது ஏராளமான சிவனடியார்கள் கைலாய வாத்தியங்களை இசைத்தனர்.ஏராளமான பக்தர்கள் சுவாமிக்கு மலர்கள் மற்றும் பல்வேறு வகையான பொருள்களால் அர்ச்சனை செய்தனர்.இதன் பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.பிரதோஷ விழாவில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.