பதிவு செய்த நாள்
05
ஜூலை
2023
03:07
தர்மபுரி: அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில், தேரோடும் பாதையை இரும்பு வேலியால் அடைத்தவர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில், வள்ளல் அதியமானால் கட்டப்பட்ட கால பைரவர் கோவில் உள்ளது. இங்கு தேய்பிறை அஷ்டமி நாளில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அப்போது கோவிலை வலம் வருவது வழக்கம். அந்த வழியாக கோவில் தேரோட்டமும் நடக்கும்.
இந்நிலையில் கோவிலின் தீப துாண் பகுதி, பக்தர்கள் தீபமேற்றும் இடம் மற்றும் தேரோடும் பாதை தங்களுடைய பட்டா நிலம் எனக்கூறி, அப்பகுதியை சேர்ந்த இருவர், இரும்பு முள்வேலி அமைத்துள்ளனர். தீபமேற்ற அமைத்திருந்த இரும்பு தாங்கிகளையும் சேதப்படுத்தியுள்ளனர். லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் கோவிலில் பக்தர்கள் நலனுக்கு எதிராக, தேரோட்ட பாதையை தடுத்தும், புனிதம் வாய்ந்த யாக சாலை மீதும், கோவில் நிலத்திலும் இரும்பு முள் வேலி அமைத்ததாக தனசேகர், காவேரியப்பன் மீது, கோவில் செயல் அலுவலர் ஆனந்தன் புகாரளித்துள்ளார். இதன்படி அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர். இதனிடையே சம்பவ இடத்தில், தர்மபுரி மாவட்ட, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமார் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.