பதிவு செய்த நாள்
06
ஜூலை
2023
02:07
அம்பாசமுத்திரம்; நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி (கரந்தையார் பாளையம்) ஸ்ரீவராகபுரம் தெருவில் கன்னடியன் கால்வாய் கரையோரம் பிரசித்தி பெற்ற பூர்ண புஷ்கலா அம்பாள் சமேத குளத்துாரிலய்யன் சாஸ்தா கோயிலில் 20 ஆண்டுகளுக்கு பின் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
கடந்த 2ம் தேதி காலை மகா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. கோயிலின் வடபுற பிரகாரத்தில் இரு குண்டங்களுடன் கூடிய 2 யாகசாலைகள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலை சதுர் வேதபாராயணம் முழங்க ஆறாம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, யாக சாலையில் இருந்து குளத்துாரிலய்யன் சாஸ்தாவின் வாகனமான யானை விக்ரஹம் முன்னெடுத்து செல்லப்பட புனித நீர் குடங்கள் கோயிலை சுற்றி விமானங்களை வந்தடைந்தது. சரியாக 6.34 மணிக்கு ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ பக்தி கோஷங்கள் முழங்க மகா கணபதி, பூர்ண புஷ்கலா அம்பாள் சமேத குளத்துாரிலய்யன் சாஸ்தா, விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி அம்பாள் விமானங்களுக்கு ஒரு சேர புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மூலஸ்தானங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், மகா கணபதி, பூர்ண புஷ்கலா அம்பாள், குளத்துாரிலய்யன் சாஸ்தா, விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி அம்பாளுக்கு மகா அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. இரவில், பிரசன்ன பூஜை நடந்தது. கும்பாபிஷேகத்தை, பிரம்மஸ்ரீ அப்பாத்துரை வாத்தியார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் வைதீக முறைப்படி நடத்தினர். விழாவில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். நுால் வெளியீடு கோல்கட்டா ராதா கிருஷ்ணன் தொகுத்த தர்மசாஸ்தா புகழ் பாடும் ‘தேஜோவதி’ ஆன்மிக நுால் வெளியிடப்பட்டது. கும்பாபிஷேகத்தை காண கோயில் வளாகத்தில் எல்.இ.டி., டி.வி.,க்கள் வைக்கப்பட்டிருந்தன.