பதிவு செய்த நாள்
12
ஜூலை
2023
11:07
ஆரணி: ஆரணி அருகே, காமக்கூரில், மிகப் பழமையான அமிர்தாம்பிகை அம்மன் உடனுறை சந்திரசேகரர் கோவிலின் கருவறை இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த காமக்கூரில், சுயம்புவாக தோன்றிய அமிர்தாம்பிகை அம்மன் உடனுறை சந்திரசேகரர் கோவில் மிக பழமையானது. இங்கு, ஆதி சங்கரரால், காமாட்சி அம்மன் சன்னிதி ஸ்தாபிதம் செய்யப்பட்டு, கருவறையில், அம்மன் காலடியில் ஸ்ரீசக்கரம் பொருத்தப்பட்டுள்ளது என கருதப்படுகிறது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோவில் பராமரிப்பின்றி உள்ளது. இங்கு அர்ச்சனை செய்யும் சிவாச்சாரியார், தினக்கூலி அடிப்படையில், குறைவான சம்பளத்துடன் பணி புரிந்து வருகிறார். கோவிலில் தினசரி பூஜைக்கு அறநிலையத்துறை நிதி ஒதுக்குவது இல்லை. பக்தர்களால் சிவாச்சாரியாரிடம் வழங்கப்படும் சொற்ப நிதியை வைத்து, தினசரி அபிஷேகம், விளக்கு ஏற்றுதல் மற்றும் பூஜை பணி நடக்கிறது. இக்கோவிலின் மூல கருவறை இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இக்கோவில் பராமரிப்பின்றி உள்ளது. இதேநிலை நீடித்தால், வரும் மழை காலங்களில் கோவில் மேலும் சேதமடையும் அபாய நிலையில் உள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.