பதிவு செய்த நாள்
13
ஜூலை
2023
10:07
ஸ்ரீநகர்,ஜம்மு - காஷ்மீரில், அமர்நாத் யாத்திரையில் பங்கேற்ற அமெரிக்கர்கள், பனி லிங்கத்தை வழிபட்டனர்.
ஜம்மு -- காஷ்மீரில், இமயமலை பகுதியில் உள்ள அமர்நாத் குகை கோவிலுக்கு, ஆண்டுதோறும் யாத்திரையாக செல்லும் பக்தர்கள், இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசித்து வருகின்றனர். இந்தாண்டுக்கான யாத்திரை, கடந்த 1ல் துவங்கியது. கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுஇருந்த யாத்திரை சமீபத்தில் மீண்டும் துவங்கியது. இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த இரண்டு பேர், அமர்நாத் யாத்திரையில் காவி உடை அணிந்தபடி பங்கேற்று, பனி லிங்கத்தை வழிபட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: கலிபோர்னியாவில் உள்ள கோவில் ஆசிரமத்தில் நாங்கள் தங்கி உள்ளோம். அமர்நாத் யாத்திரையில் பங்கேற்க வேண்டும் என்பது, எங்களது நீண்ட கால கனவு. தற்போது அது நிறைவேறி உள்ளது. இங்கு, மலைகளும், புனித குகையும் ஒருவித அமைதியை தருகின்றன. நாங்கள் தற்போது எப்படி உணர்கிறோம் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று பரவசத்துடன் அவர்கள் கூறினர்.
5 பேர் பலி: அமர்நாத் யாத்திரையில் பங்கேற்ற பக்தர்களில் ஐந்து பேர், கடந்த 24 மணி நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்துஉள்ளனர். இதையடுத்து, இந்த ஆண்டு யாத்திரையில் பலியானோரின் எண்ணிக்கை, 19 ஆக அதிகரித்துஉள்ளது. உ.பி., - ம.பி.,யைச் சேர்ந்த தலா இரு பக்தர்கள் உட்பட ஐந்து பேர் பலியாகி உள்ளனர்.