இந்தாண்டு 2 ஆடி அமாவாசை ; சதுரகிரியில் பக்தர்களுக்கு முன்னேற்பாடு பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூலை 2023 01:07
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை வழிபாடு ஆகஸ்ட் 16ல் நடக்கிறது. இதற்கான ஆரம்பக்கட்ட முன்னேற்பாடுகளை கோயில் நிர்வாகம் துவக்கிவுள்ளது.
இந்த தமிழ் வருடத்தில் ஆடி 1 மற்றும் ஆடி 31என இரண்டு அமாவாசை நாட்கள் வருகிறது. இதில் ஆடி 31, ஆகஸ்ட் 16 அன்று ஆடி அமாவாசை திருவிழாவினை சிறப்பாக நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனை முன்னிட்டு ஆகஸ்ட் 13 அன்று பிரதோஷம், ஆகஸ்ட் 14 சிவராத்திரி வழிபாடு, ஆகஸ்ட் 16 ஆடி அமாவாசை வழிபாடு நடக்கிறது. இதற்காக ஆகஸ்ட் 13 முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். வழக்கமாக நான்கு நாட்கள் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் ஆடி அமாவாசை வழிபாட்டிற்காக கூடுதல் நாட்கள் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போது சதுரகிரி மலைப்பகுதியில் போதிய மழை இல்லாததால் வனப்பகுதி காய்ந்தும், ஓடைகளில் போதிய நீர்வரத்து இல்லாமலும் உள்ளது. இருந்த போதிலும் ஆடி அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு சுமார். ஒரு லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கான ஆரம்பகட்ட முன்னேற்பாடு பணிகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் கோயில் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஆடி ஒன்றாம் தேதி வரும் அமாவாசையை முன்னிட்டு, ஜூலை 15 பிரதோஷ நாள் முதல் ஜூலை 18 வரை நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர்.