பதிவு செய்த நாள்
13
ஜூலை
2023
05:07
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் திருக்கோயிலில் முழுமை பெறாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள 2ம் பிரகாரம் கட்டுமான பணியை துவக்காததால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
தீர்த்த தலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்திற்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். இத்தீர்த்தங்கள் ஒவ்வொன்றுக்கும் தனி மகிமை உள்ளதால், இங்கு நீராடுவதை பக்தர்கள் பாக்கியமாக கருதுகின்றனர். ராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க இக்கோயிலில் புனித நீராடி சிவனை தரிசித்தார். இதனால் இக்கோயில் ராமநாதசுவாமி கோயில் என்ற பெயர் பெற்றது. இதனால் தான் உலகில் உள்ள அனைத்து ஹிந்துக்களும் இங்கு நீராடி தரிசிக்க குவிகின்றனர்.
கிடப்பில் பிரகார பணி: பிரசித்த பெற்ற இக்கோயிலில் ராமநாதபுரம் மன்னர்கள், காரைக்குடி நகரத்தார், ஆன்மிகப் பெரியவர்கள் பங்களிப்புடன் ராஜகோபுரத்தை கட்டினர். 1975ல் சுண்ணாம்பு சுவரில் இருந்த முதல் பிரகாரத்தை அகற்றி கருங்கல்லில் பிரகாரம் அமைத்தனர். அதே கால கட்டத்தில் 2ம் பிரகாரம் கட்டுமான பணியை துவக்கிய நிலையில் சில காரணங்களால் பிரகார பணி பாதியில் நின்றது. பின் 1985ல் கருங்கல்லில் 2ம் பிரகாரம் கட்டுமான பணி துவங்கினாலும், வடக்கு பகுதியில் இன்று வரை 100 மீட்டர் கட்டுமானம் முழுமை பெறாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இன்றும் 2ம் பிரகாரம் (வடக்கு மட்டும்) வானம் பார்த்த பூமியாக உள்ளதால் கோயில் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எதிர்காலத்தில் சமூக விரோதிகளால் விபரீதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முழுமை பெறாத 2ம் பிரகாரத்தை பூர்த்தி செய்ய ஏற்கனவே வடிவமைத்து தயாராக இருந்த 100க்கும் மேற்பட்ட கருங்கல் துாண்கள், பல ஆண்டுகளாக கோயில் தெற்கு கோபுரம் அருகே கிடந்தன. இவற்றை சமீபத்தில் தெற்கு கோபுரம் அருகே கோயில் நிர்வாகம் அமைத்த பூங்கா, பக்தர்கள் உடைமாற்றும் பகுதிக்கு பயன்படுத்தினர்.
மத்திய அரசு தலையிடுமா: 2ம் பிரகாரத்திற்கு தயாராக இருந்த கருங்கல் துாண்களும், தற்போது கைவசம் இல்லை. எனவே புதிய துாண்கள், சீலிங் பட்டை துாண்கள் உருவாக்கி புனரமைக்காத 2ம் பிரகாரத்தை வடிவமைக்க ஹிந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக ஆன்மிக பெரியோர்கள், ஹிந்து அமைப்பினர் பலமுறை கோரிக்கை விடுத்தும் ஹிந்து சமய அறநிலையத்துறை கண்டு கொள்ளவில்லை. எனவே தொன்மையான இக்கோயில் கட்டடங்கள், புனிதம் காக்க மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், என பக்தர்கள் தெரிவித்தனர். ஹிந்து மக்கள் கட்சி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பிரபாகரன் கூறுகையில், ஆன்மிக கொடையாளர்கள் பலர் காணிக்கையாக அள்ளி கொடுக்க தயாராக இருந்தும், 2ம் பிரகாரத்தை முழுமைப்படுத்த தமிழக அரசும், அறநிலையத்துறை அதிகாரிகளும் முன்வரவில்லை. தரிசனம், புனித நீராடல் மூலம் பக்தரிடம் பணம் பறிப்பதிலேயே அதிகாரிகள் குறியாக உள்ளனர். கோயிலின் மகத்துவம், புகழ், கட்டட கலைக்கு பெருமை சேர்க்கும் 2ம் பிரகாரத்தை பூர்த்தி செய்ய ஹிந்து சமய அறநிலையத்துறை வசமுள்ள பக்தர்களின் காணிக்கையை செலவிட்டு கட்டுமான பணியை துவக்க முதல்வர் உத்தரவிட வேண்டும். அல்லது மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும், என்றார்.