சதுரகிரி மலையில் காட்டுத்தீ; கோயிலில் பக்தர்கள் தங்க வைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2023 10:07
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி மலையில் இன்று இரவு ஏற்பட்ட காட்டு தீயினால், பக்தர்கள் மலையிலிருந்து கீழ் இறங்குவது நிறுத்தி வைத்து கோயிலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி மாத முதல் அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். சுமார் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறிய நிலையில் மாலை 6 மணி வரை பெரும்பாலான பக்தர்கள் கீழே இறங்கி விட்டனர். இந்நிலையில் சாப்டூர் வனப்பகுதி பீட் நம்பர் 5 என்ற இடத்தில், பிலாவடி கருப்பசாமி கோயிலுக்கு மேற்கு, தவசி பாறைக்கு கிழக்கு பகுதியில் இன்று இரவு 7:00 மணிக்கு காட்டு தீ பற்றி எரிந்தது. இதனை தாணிப்பாறை மலை அடிவாரத்தில் இருந்த பக்தர்கள் பார்க்க முடிந்தது. இதனையடுத்து மலையில் இருந்து பக்தர்கள் கீழே இறங்குவது நிறுத்தி வைக்கப்பட்டு கோயிலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வத்திராயிருப்பு, சாப்டூர் வனச்சரகர்கள் செல்வமணி மற்றும் பிரபாகரன் தலைமையில் வனத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக சதுரகிரி வனப்பகுதியில் போதிய மழை இன்றியும், ஓடைகளில் நீர்வரத்து இல்லாத நிலையிலும், வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்பட்டது. இன்று மாலை மலைப் பகுதியில் பலத்த காற்று வீசியதால் மூங்கில்கள் உரசி தீப்பிடித்து, காய்ந்து கிடக்கும் செடி, கொடிகளில் பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.