பத்து பாடல்களை கொண்டதை பதிகம் என்பர். திருநீற்றுப்பதிகம் பற்றி எல்லோருக்கும் தெரியும். மகத்துவம் நிறைந்த மந்திரப்பதிகம் அது. குழந்தைகளுக்கு திடீர் என காய்ச்சல் அடித்தாலோ, சுபநிகழ்ச்சிகளில் பெரியவர்கள் ஆசிர்வாதம் செய்தாலோ அதன் அடையாளமாக திருநீற்றை அவர்களுக்கு அணிவித்து நலமுடன் வாழ பிராத்திப்பர் வாழ்த்துவர். இந்த பதிகத்தின் சிறப்புகள் ஏராளம். இப்பதிகத்திற்கு மாதொருபாகன் பதிகம் என்கிற சிறப்புப் பெயருண்டு. கூன்பாண்டிய மன்னனின் வெப்பு நோய் நீங்க நாயன்மார்களில் ஒருவரான ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற இப்பதிகத்தின் முதல் ஆறு பாடல்களின் கடைசி வரியில் திருவாலவாயன் திருநீறே என்றும், அடுத்துள்ள ஐந்து பாடல்களில் ஆலவாயன் திருநீறே என்று பாடி இருப்பார். திரு என்ற சொல் அம்பிகையை குறிக்கும் என்பதால் இதனை மாதொருபாகனார் பதிகம் என்பர்.