சதுரகிரியில் பற்றிய காட்டுத்தீ; பல மணி நேரம் போராடி அணைத்த வனத்துறையினர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூலை 2023 05:07
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி மலையில் நேற்று முன் தினம் இரவு பிடித்த காட்டுத் தீயை, நேற்று மதியம் வரை பல மணி நேரமாக போராடி வனத்துறையினர் அணைத்தனர். இருந்தபோதிலும் மலையின் சில பகுதியில் தீ புகைந்து கொண்டிருந்ததால் தொடர்ந்து வனத்துறையினர் மலைப்பகுதியில் தங்கி இருந்து தீ பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி முதல் அமாவாசையை முன்னிட்டு நேற்று முன் தினம் அதிகாலை முதல் மலை ஏறிய பக்தர்களில் பெரும்பாலானோர் அடிவாரம் திரும்பிய நிலையில் இரவு 7:00 மணிக்கு சாப்டூர் வனப்பகுதி பீட் 5 என்ற இடத்தில், பிலாவடி கருப்பசாமி கோயிலுக்கு மேற்கு, தவசிபாறைக்கு கிழக்கு பகுதியில் காட்டு தீ பற்றி எரிந்தது. இதனால் மலையில் இருந்த பக்தர்கள் கீழே இறங்க அனுமதிக்கப்படாமல் கோயிலில் தங்க வைக்கப்பட்டனர். தகவலறிந்த சாப்டூர், வத்திராயிருப்பு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று காலை கோயிலுக்கு செல்வதற்காக வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். கோயிலில் தங்கி இருந்த பக்தர்கள் அதிகாலை 5:00 மணி முதல் தாணிப்பாறை அடிவாரத்திற்கு வனத்துறையினர் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். காலை 10 மணிக்குள் மலையில் இருந்த பக்தர்கள் அனைவரும் முழு அளவில் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து வனத்துறையினர் தீயை அணைத்த போதிலும் பாறைகளில் காய்ந்து கிடந்த செடி, கொடிகள் மூலம் தீ பரவிக்கொண்டே இருந்தது. இதனால் நேற்று மதியம் 3:00 மணி வரை தீயணைக்கும் பணியில் வனத்துறை ஈடுபட்டனர். இருந்த போதிலும், மழையின் சில பகுதிகளில் தீ புகைந்து கொண்டு இருந்ததால் அப்பகுதியில் வனத்துறையினர் தங்கி தீயை மேலும் பரவிடாமல் தடுத்து வருகின்றனர். சம்பவ பகுதியானது தாணிப்பாறையில் இருந்து சதுரகிரி கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையின் எதிர் திசையில் உள்ள மலையில் தீப்பிடித்ததால், பக்தர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.