பதிவு செய்த நாள்
19
ஜூலை
2023
05:07
மேட்டுப்பாளையம்: குருந்தமலை குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில், மண்டல பூஜை, 108 சங்காபிஷேகத்துடன் நிறைவடைந்தது.
காரமடை அருகே குருந்தமலையில், மிகவும் பழமையான, குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் ஜூன் மாதம் 1ம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை துவங்கியது. ஒவ்வொரு நாளும் குழந்தை வேலாயுத சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் செய்து வந்தனர். இன்று மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. காலையில் மலை மீதுள்ள கோவில் நடை திறந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜை செய்தனர். அதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில், முருகர், வள்ளி தெய்வானை ஆகிய சுவாமிகளுக்கு அலங்காரம் செய்து வைத்தனர். சுவாமிகள் முன், தீர்த்தங்கள் நிறைந்த, 108 சங்குகள் வரிசையாக வைக்கப்பட்டன. யாகசாலையில் யாக வேள்வி பூஜைகள் நடந்தன. பின்பு மதியம் ஒரு மணிக்கு சங்கிலிருந்த தீர்த்தத்தை, மூலவர் மீது ஊற்றி அபிஷேகம் செய்தனர். பின்பு மூலவர் சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்து, தீபாரதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் கோவை ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் ரமேஷ், கோவில் செயல் அலுவலர் லோகநாதன் உட்பட நன்கொடையாளர்கள், பக்தர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர். கோவில் தலைமை அர்ச்சகர் ஜெயபாலசுப்பிரமணியம் தலைமையில், 5 அர்ச்சகர்கள் யாக வேள்வி பூஜை செய்தனர்.