பதிவு செய்த நாள்
26
ஜூலை
2023
02:07
துாத்துக்குடி: துாத்துக்குடி, பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றம், இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
உலக பிரசித்தி பெற்ற துாத்துக்குடி, பனிமயமாதா ஆலய திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை ஒட்டி, நேற்று மாலை கொடிப்பவனி நடந்தது. இதற்கு முன்பாக, திருப்பலி நடந்தது. பின்னர், திருச்சிலுவை சிற்றாலயத்தில் இருந்து காணிக்கை பவனி, லெரின் டீரோஸ் தலைமையில் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக வந்த கொடிப்பவனி, மாலை 6:00 மணியளவில் ஆலயத்திற்குள் வந்தடைந்தது. அங்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. இன்று (26ம் தேதி), காலை 5:00 மணிக்கு முதல் திருப்பலியும், 5.45 மணிக்கு 2ம் திருப்பலியும் நடைபெற்றது. பின்னர் காலை 7:00 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து, காலை சுமார், 8:00 மணியளவில் துாத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் முன்னிலையில், கொடியேற்றம் நடைபெற்றது. பனிமயமாதா ஆலய பங்குதந்தை குமார்ராஜா மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றத்திற்கு பின்னர், மறை மாவட்ட ஆசிகளுக்காக 9.30 மணிக்கு திருப்பலி நடைபெற்றது. மதியம் 12:00 மணிக்கு பனிமய அன்னைக்கு, பொன்மகுடம் அணிவிக்கும் நிகழ்ச்சி, கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் முன்னிலையில் நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு திருப்பணிகளுக்காக, சிறப்பு திருப்பலி நடக்கிறது. 7.15 மணிக்கு செபமாலை, நற்கருணை ஆசீர் போன்றவை நடக்கிறது. நவநாட்களில் தினமும் திருப்பலி செபமாலை, மறையுரை நடக்கிறது. வரும் ஆக., 5ம் தேதிமுக்கிய திருவிழாவான, அன்னையின் தங்கத்தேர் பவனி நடக்கிறது. இன்று கொடியேற்றத்தை ஒட்டி, 10 நாட்களும் துாத்துக்குடி நகரமே மிகவும் களைகட்டி காணப்படும்.