அழகர்கோவில் ஆறடி கலசம்... தரிசித்தால் உடல் சிலிர்க்கும்...
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2023 11:07
அழகர் கோவில் : மதுரை மாவட்டம் அழகர் கோவில் கள்ளழகர் கோயில் கும்பாபிஷேகம் இவ்வாண்டு நடைபெற இருக்கும் நிலையில் ராஜகோபுரத்தைப் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இங்கு ஏழு படிநிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்தில் 628 சிற்பங்கள் உள்ளன. இதில் ராமாயண, மகாபாரத கதைகள் மற்றும் ஒவ்வொரு காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைகளை சித்தரிப்பதாக உள்ளது. கிருதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்ற யுகங்களில் பெருமாளின் அவதாரங்கள் குறித்தும் சொல்லப்பட்டிருக்கின்றன.
கோயில் துணைகமிஷனர் ராமசாமி கூறியதாவது: 2011ல் கும்பாபிஷேகம் நடந்தது. இவ்வாண்டு நடக்கவுள்ள கும்பாபிஷேகத்திற்கான பணிகள் இரு மாதங்களில் முடிந்து விடும். இக்கோபுரம் ஏழு படி நிலைகளுடன் 120 அடி உயரம் கொண்டது. கோபுரத்தின் மேல் பகுதியில் ஏழு கலசங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஆறேகால் அடி உயரம் கொண்டவை. இதன் ஏழாம் படிநிலையில், கோபுரத்தைக் குடை போல் காக்க கொடுங்கை அமைப்பு உள்ளது. மரத்தாலான இந்த கொடுங்கை சுண்ணாம்பு கலவை கொண்டு பூசப்பட்டுள்ளது. ராஜகோபுரத்தின் மேல் எந்த திசையிலிருந்து மழை பெய்தாலும் மழைநீர் விழாமல் இது பாதுகாக்கிறது. தற்போது பழமை மாறாமல் பொள்ளாச்சி சுண்ணாம்பு, கடுக்காய் உள்ளிட்ட கலவைகள் கொண்டு சிமென்ட் இல்லாமல் புனரமைத்து வருகிறோம், என்றார்.