பதிவு செய்த நாள்
01
ஆக
2023
04:08
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆசிரமத்தில் முளைப்பாரி திருவிழாவில் 150 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முளைபாரி ஏந்தி வந்து பொங்கல் வைத்து வழிபட்டனர். உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆசிரம வளாகத்தில் முளைப்பாரி திருவிழா நடந்தது. இதனையொட்டி பெண்கள் தங்களது வீடுகளில் முளைப்பாரிகளை வைத்து வழிபட்டு ஸ்ரீ சாரதா ஆசிரமத்திற்கு கொண்டு வந்தனர். ஸ்ரீ சாரதா ஆசிரமத்தில் ஸ்ரீ சாரதாம்பாள், ராமகிருஷ்ணர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு முளைப்பாரி வைத்து வழிபாடு நடந்தது. அப்போது ஸ்ரீ சாரதா ஆசிரம மேலாளர் யத்தீஸ்வரி அனந்த பிரேம ப்ரியா அம்பா தலைமையில் ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளித் தாளாளர் யத்தீஸ்வரி ஆத்மா விகாச ப்ரியம்பா சிறப்பு பூஜைகள் செய்து தீபாரதனை செய்தனர். இந்த முளைப்பாரி திருவிழாவில் பள்ளியந்தாங்கல், அஜிஸ் நகர், பில்லூர், மலையனூர், பு.கொணலவாடி, ஆர்.ஆர்.குப்பம்., மூலசமுத்திரம், வெள்ளையூர், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து ஆசிரமத்தில் பொங்கல் வைத்து வழப்பட்டனர்.
இத்திருவிழாவில் ஆசிரம சகோதரிகள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முளைப்பாரி விழாவையொட்டி ஆசிரமத்தின் விவேகானந்தா சேவா பிரதிஷ்டான் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு செயல் விளக்க கண்காட்சி வைத்திருந்தனர். அவற்றில் காடுகள் நாட்டின் கண்கள், விளைநிலமும் தெய்வமும், சிறுதானிய உணவில் சீரான ஆரோக்கியம்,, கோமாதாவே எங்கள் குலமாதா, பண்பாட்டை பாதுகாப்போம், ஆன்மீகத்தில் அறிவியல் காண்போம், மஞ்சள் பை மாறுவோம், மாற்றம் இன்றே துவக்குவோம், அஞ்சறை பெட்டிக்குள் ஒரு அருமருந்து கடை, தண்ணீர் சிக்கனம் தேவை எக்கணமும், பாரத பெருமை உணர்த்திடுவோம், பாரம்பரியம் மீட்டு எடுப்போம் போன்ற கருத்துக்கள் அடங்கிய விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினர். அவற்றின் அவசியம் குறித்து பெண்கள் விளக்கி கூறினர்.