பதிவு செய்த நாள்
07
ஆக
2023
11:08
பெரம்பலுார், பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள ஹிந்து கோயில்களின் சாமி சிலைகள் தொடர்ந்து உடைக்கப்பட்டு சேதப்படுத்தும் சம்பவங்கள் நடப்பதால் பக்தர்கள் அதிர்ச்சடைந்துள்ளனர்.
பெரம்பலுார் மாவட்டம், செட்டிகுளம் கிராமத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தண்டாயுதபாணி கோயில் உள்ளது. இக்கோயில் மலையின் உச்சியில் உள்ளது. மலையடிவாரத்தில் உள்ள கிரிவலம் மண்டபத்தில் சிமெண்டாலான முருகன், வள்ளி, தெய்வானை சாமி சிலைகள் உள்ளது. இதில், வள்ளி, தெய்வானை சாமி சிலைகளை நேற்று மதியம் 12:30 மணியளவில் ஒரு நபர் கல்லால் உடைத்து சேதப்படுத்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த, பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்து, மண்டப துாணில் கட்டி வைத்தனர். பின்னர், இது குறித்து பாடாலுார் போலீசுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர் பக்கத்து ஊரான சிறுவயலுார் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் பூபதி, 49, என்பதும், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. அவரிடம் போலீசார் மேலும் விசாரிக்கின்றனர். பெரம்பலுார் மாவட்டத்தில் தொடர்ந்து ஹிந்து கோவில்களின் சாமி சிலைகள் உடைக்கப்படும் சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சடைந்துள்ளனர். பெரம்பலுார் மாவட்டத்தில் ஏற்கனவே சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் உப கோவிலான செல்லியம்மன், பெரியசாமி கோயில், எழுமூர் அய்யனார் கோயில், நாரணமங்கலம் கருப்பசாமி கோயில், செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் ஆகிய கோவில்களில் சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. ஆனால், கோவில் சிலைகள் உடைக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறையும், மாவட்ட காவல் துறையும் இதை தடுப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தன போக்காகவே உள்ளனர் என பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சாமி சிலைகளை சேதப்படுத்துவதாக போலீசாரால் கைது செய்யப்படும் நபர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளதால் அவர்கள் தான் உண்மை குற்றவாளிகளா அல்லது கணக்கு காட்டுவதற்காக இவ்வாறு கைது செய்யப்படுகிறார்களா என்று பக்தர்கள் போலீசார் மீது சந்தேகத்தை எழுப்புகின்றனர். எனவே, பெரம்பலுார் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து கோயில்களுக்கும் காவலர் நியமிக்க வேண்டும், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். சம்பந்தப்பட்ட பகுதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இந்து முன்னணி கண்டனம்: இந்து முன்னணி திருச்சி கோட்ட செயலர் குணா வெளியிட்டு அறிக்கை: செட்டிகுளம் தண்டாயுதபாணி கோயிலில் நேற்று வள்ளி, தெய்வானை ஆகிய இறைவன் திருமேனிகள் உடைக்கப்பட்டு இருக்கிறது. இது சம்பந்தமாக போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் என்று கூறுகிறார்கள். வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்படும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கோவிலை பாதுகாப்பதில் அலட்சியமாக செயல்படுகிறார்கள். ஏற்கனவே, சிறுவாச்சூர், எழுமூர், நாரணமங்கலம், செட்டிகுளம் கிராமத்தில் உள்ள கோவில் சுவாமிகளின் திருமேனிகள் உடைக்கப்பட்டு இருக்கிறது. பெரம்பலுார் மாவட்டத்தில் தொடர்ந்து ஒவ்வொரு கோவிலாக திருமேனிகள் உடைப்பது திட்டமிட்ட ஒரு செயலாக இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது. இது சம்பந்தமாக ஏற்கனவே பலமுறை இந்து முன்னணி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி இருக்கிறது. மீண்டும் மீண்டும் சுவாமி விக்கிரகங்கள் உடைப்பது என்பது பொதுமக்களை மனதில் மிகப்பெரிய அச்சத்தை உருவாக்கி வருகிறது.
கோயிலின் புனிதத்தை காக்க வேண்டிய அறநிலையத்துறை வருமானத்தை மட்டுமே பார்க்கிறதே தவிர கோயிலை பாதுகாப்பது இல்லை. இன்று நடந்த இந்த சுவாமி விக்ரகங்கள் உடைப்பு சம்பவத்திற்கு இந்து சமய அறநிலைத்துறையே பொறுப்பு. உடனடியாக செட்டிகுளம் தண்டாயுதபாணி கோயிலுக்கு காவலாளியை நியமித்து, கோவிலை பாதுகாக்க வேண்டும். காவல்துறையும் மாவட்டத்தில் உள்ள முக்கியமான பழமையான, தொன்மையான கோயில்களை பாதுகாப்பதற்கு நேரம் கொடுத்து கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும் என இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.