பதிவு செய்த நாள்
08
ஆக
2023
02:08
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிப்பரணி விழாவில் பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். பால் குடம், காவடிகள் எடுத்து வழிபட்டனர். ஆறு மணி நேரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர்.
ஆடிப்பரணி என்பதால், தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி உட்பட, அண்டை மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் திருத்தணிக்கு வந்தனர். பின், மலையடிவாரத்தில் உள்ள சரவணபொய்கை மற்றும் மேல்திருத்தணியில் உள்ள நல்லாங்குளம் ஆகிய இடங்களில், பக்தர்கள் புனித நீராடி, மலர், மயில், பால் மற்றும் பன்னீர் காவடிகளுடன், மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை தரிசித்தனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, மொட்டை அடித்தும் காவடிகள் எடுத்தும், முருகப்பெருமானை தரிசித்தனர். நேற்று இரவு முதல், இன்று வரை, 60 ஆயிரம் பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து தரிசித்தனர். மலைக்கோவிலில் அதிகளவில் பக்தர்கள் குவிந்ததால், பொது வழியில், பக்தர்கள் ஆறு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை வழிபட்டனர். சில பக்தர்கள் காவடிகளுடன் பம்பை, உடுக்கை மற்றும் சிலம்பாட்டத்துடன் வந்து வழிபட்டனர். விழாவை ஒட்டி, அதிகாலை 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.காவடி மண்டபத்தில் உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.