பதிவு செய்த நாள்
11
ஆக
2023
10:08
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சுவாமி தரிசன செய்ய குடும்பத்துடன் வந்த தமிழக கவர்னர் ரவி கிரிவலம் சென்று வழிபாடு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு, 2 நாள் பயணமாக, பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க, தமிழக கவர்னர் ரவி வருகை தந்துள்ளார். ‘‘தமிழகத்தில் பல பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்ததில் ஒன்று புரிகிறது. பாரத நாட்டின் ஆன்மிக தலைநகரம் தமிழகம் என தெரிகிறது,’’ என, கவர்னர் ரவி பேசினார். திருவண்ணாமலையில், கிரிவலப்பாதையில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த, சாதுக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில், அவர் தமிழில் பேசுகையில், ‘‘திருவண்ணாமலைவாசிகளே, சகோதர சகோதரிகளே, ஓம் நமசிவாய, திருவண்ணாமலை, ஒரு மிக ஆன்மிக பூமி, அது நமக்கு தெரியும், சிவபெருமானின் பூமி, நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை. இந்த பிரபஞ்சத்தில் எதுவும் சிவபெருமான் விருப்பம் இல்லாமல் நடக்காது. இங்குள்ள மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தென்னாட்டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி,’’ என, பேசினார்.
தொடர்ந்து அவர், ஆங்கிலத்தில் பேசியதாவது: திருவண்ணாமலையில் ஆன்மிகத்தை என்னால் உணர முடிகிறது. சாதுக்கள், சந்நியாசிகள், ரிஷிகளின் அருந்தவத்தால், இந்த பாரத நாடு உருவாக்கப்பட்டிருக்கிறது. நான் இந்த புண்ணிய பூமியில், கால் வைத்ததற்காக மிகவும் பெருமை படுகிறேன். பாரத நாடு, பல அரசாட்சிகளால் பிளவு பட்டிருந்தாலும், நாம் ஒன்றானவர்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ரிஷி குலத்தோர் ஞானம் பெற்று, இந்த உலக பிரபஞ்சம் முழுவதும், முழுவதும் சிவனால் உருவாக்கப்பட்டது என்றும், நாம் அனைவரும் அவரின் குழந்தைகள், ஒன்றானவர்கள் என உணர்த்தியவர்கள். இந்த பிரபஞ்சம் முழுவதும், சிவபெருமானின் பிரதிபலிப்பு. இந்த உண்மையே, சனாதனத்தில் மையம். நம் பாரத நாடு, தெற்கே கன்னியாகுமரி முதல், வடக்கே இமயம் வரை பரந்து விரிந்துள்ளது. சனாதன தர்மம் பாரத குடும்பத்திற்கானது. நம் பிரார்த்தனைகள் சுயநலமற்றது. அனைவரும் நலமோடு வாழ வேண்டும் என்ற, அந்த பிரார்த்தனையே நம் சனாதன தர்மம். இதில், நான், எனது என்ற குறுகிய மனப்பான்மையின்றி, நாம், நமது என்ற மனப்பான்மைக்குரியது. குறுகிய மனப்பான்மையுடைய சில கொள்கைகளால், இந்த சனாதன தர்மம் சில அழிவுகளை சந்திக்க நேர்ந்தது. நான் தமிழகத்தில் பல பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்ததில் ஒன்று புரிகிறது, பாரத நாட்டின் ஆன்மிக தலைநகரம், தமிழகம் என்பது தெரிகிறது. பதஞ்சலி, திருமூலர், அகஸ்தியர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் போன்றோர் இங்கு அவதரித்து, நாம் யார் என்பதை உணர்த்தி ஒற்றுமையுடன் வாழ கூறினர். நாம் இந்த பிரபஞ்சத்தின் ஒரு பகுதியே. நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஒரு இனிமையான வாழ்க்கை வாழ்வதே பாரதத்தின் குறிக்கோள். இந்த இறை சக்தி, நம் பாரதத்திலிருந்து உலகம் முழுவதும் பரவ வேண்டும். நம் அடிப்படை தத்துவம், யாதும் ஊரே யாவரும் கேளிர். இது மட்டுமே உலகத்தை காப்பற்றக்கூடியது. அனைத்து மக்களையும் ஆன்மிகம் உடையவர்களாக மாற்றுவது நம் கடமை. இந்த பொறுப்பு சமுதாயத்திற்கு உள்ளது. சாதுக்களாகிய உங்களது கடமை, ஆலயத்திலோ, ஆஸ்ரமத்திலோ குறுகி விடக்கூடாது. இந்த சமுதாயத்திற்கு பரந்து விரிய வேண்டும். கிரிவலப்பாதையில் அசைவ உணவுகளை விற்பதற்கு அனுமதியே கிடையாது. கிரிவலப்பாதையில், போதுமான கழிவறை தேவை. என்னால் முடிந்தவரை நிறைவேற்றி தர முயற்சிக்கிறேன். இவ்வாறு, அவர் பேசினார்.
ரமணர், யோகிராம் ஆஸ்ரமத்தில் வழிபாடு; திருவண்ணமலையிலுள்ள ரமணர், யோகிராம் ஆஸ்ரமத்தில் தமிழக கவர்னர் ரவி, தன் குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார். திருவண்ணாமலைக்கு நேற்று சாதுக்கள், இயற்கை விவசாயிகளுடனான சந்திப்பில் பங்கேற்ற தமிழக கவர்னர் ரவி, தொடர்ந்து நேற்று மாலை, ரமணர் ஆஸ்ரமம் மற்றும் யோகிராம் ஆஸ்ரமத்திற்கு சென்று வழிபாடு நடத்தினார். உடன் அவரது மனைவி லஷ்மி ரவி, மகள் ஷிபாலி ரவி சென்றனர். அவருக்கு, ஆஸ்ரமம் நிர்வாகம் சார்பில், பிரசாதம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.