குருவாயூர் கிருஷ்ணருக்கு தங்கக் கிரீடம் காணிக்கை வழங்கி வழிபட்ட துர்கா ஸ்டாலின்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஆக 2023 06:08
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணருக்கு தங்க கிரீடம் காணிக்கையாக சமர்ப்பித்தார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்க்கா ஸ்டாலின்.
கேரளாவின் பிரசித்தி பெற்ற கோவில் குருவாயூர் கிருஷ்ணர் கோவில். இங்கு இன்று வழிபட வந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மூலவருக்கு தங்கக் கிரீடம் காணிக்கையாக சமர்ப்பித்தார். காலை 11.30 மணிக்கு வந்த துர்க்கா ஸ்டாலின், சகோதரி ஜெயந்தி மற்றும் உறவினர்களை தேவஸ்தானம் நிர்வாக தலைவர் விஜயன், நிர்வாக குழு உறுப்பினர் மனோஜ், நிர்வாகி வினயன் ஆகியோர் சேர்ந்து வரவேற்றனர். தொடர்ந்து 32 சவரன் எடை கொண்ட தங்கக் கிரீடத்தை கோவில் சன்னதி முன் வைத்து காணிக்கையாக சமர்ப்பித்தனர். இத்துடன் சந்தனம் அரைக்கும் கருவி, கதளிபழம், நெய் ஆகியவையும் துர்கா ஸ்டாலின் மூலவருக்கு காணிக்கையாக சமர்ப்பித்தார். தொடர்ந்து சில நேரம் கோவிலில் தங்கிய அவர், உச்சபூஜைக்கு பிறகு நடை திறந்ததும் கோவிலில், தான் சமர்ப்பித்த தங்க கிரீடம் அணிந்து நிற்கும் மூலவரை கண் குளிர கண்டு, பக்தி பரவசத்தில் வழிபட்டார். மூலவரை கண்டு வணங்கிய ஆனந்தத்துடன் திரும்பி சென்ற அவருக்கு தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் விஜயன் பிரசாதத்தை வழங்கினார்.