பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கருட வாகனத்தில் பெருமாள் உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2023 10:08
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று மண்டல அபிஷேக விழா நடந்தது. பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில், ஜூன் 28 அன்று மகாகும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து தினமும் காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதன் படி மகாகும்பாபிஷேகம் நிறைவடைந்து, 45 வது நாளில் மண்டல அபிஷேகம் நடந்தது. காலை 7:35 மணிக்கு அனுக்கை, கலச ஸ்தாபனம், அக்னி முகாந்தம், மூல மந்திர ஜெப ஹோமங்கள் நடந்தன. பின்னர் காலை 9:15 மணிக்கு மகா பூர்ணாகுதி நிறைவடைந்து, கடங்கள் புறப்பாடாகின. தொடர்ந்து மூலவர் பரமஸ்வாமி, உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாளுக்கு பால், பன்னீர், இளநீர் மற்றும் கும்ப நீர் அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இரவு 7:00 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து வீதி உலா வந்த பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்தனர்.