மாதானம் முத்துமாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2023 10:08
மயிலாடுதுறை: மாதானம் முத்துமாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மாதானம் கிராமத்தில் பழமை வாய்ந்த முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 500 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி துண்டுகளாக போடப்பட்ட புளியமரம் மீண்டும் துளிர்விட்டு பெரிய மரமாக காட்சியளித்து வருகிறது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்று தீமிதி திருவிழா நடைபெறுவது சிறப்பு வாய்ந்தது. இவ்வாண்டு தீமிதி திருவிழாவையொட்டி முதல் நாள் நடைபெற்ற விழாவில் பக்தர்கள் காப்பு கட்டி கொண்டனர். தொடர்ந்து இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலை பக்தர்கள் கரகம் மற்றும் காவடி எடுத்து வந்து கோயில் முன்புறம் உள்ள தீக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தீமிதி திருவிழாவில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தீக்குழியில் இறங்கி நேர்ததிக் கடன் செலுத்தினர். திருவிழாவில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்பாளை தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவிற்கான மயிலாடுதுறை ஏடிஎஸ்பி. வேனுகோபால் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தீயணைப்பு அலுவலர் ஜோதி தலைமையில் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.