இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2023 01:08
சாத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி மாதம் கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு நடந்த அம்மன் வீதியுலா நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தை, ஆடி மாதங்களில் திருவிழா நடைபெறும். தற்போது ஆடி மாதத்தை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழாவிற்காக ஆக.,4ல் கொடியேற்றம் நடந்தது. தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக கோயிலுக்கு வந்து பொங்கலிட்டும், முடி காணிக்கை செலுத்தியும், மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று ஆடி கடைசி வெள்ளி என்பதால் ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். இருக்கன்குடி உற்ஸவ மாரியம்மன் சன்னதியில் இருந்து மதியம் 3:40 மணிக்கு ரிஷப வாகனத்தில் அம்மன் இருக்கன்குடியின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோயில் மேட்டை அடைந்தார். பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என கோஷமிட்டு வணங்கினர். கோயிலின் வசந்த மண்டபத்தில் அம்மன் ரிஷப வாகனத்தில் வீற்றிருந்து நாளை அதிகாலை 5:00 மணிக்கு அங்கிருந்து கிளம்பி உற்ஸவரின் சன்னதியை அடைவார். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் (பொ) வளர்மதி, அலுவலர்கள் செய்திருந்தனர். டி.எஸ்.பி., வினோஜி தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.