செஞ்சி கோட்டைவெங்கட்ரமணர் கோவில் கவர்னர் வருகை திடீர் ரத்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2023 06:08
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்யும் நிகழ்ச்சி திடீரென ரத்தானது.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த இரண்டு நாட்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சென்னை திரும்பி செல்லும் வழியில் நேற்று மாலை 5 மணிக்கு செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் சாமி தரிசனம் செய்யப்போவதாக கவர்னரின் நிகழ்ச்சி நிரலில் அறிவித்திருந்தனர். கவர்னர் வருகைக்காக செஞ்சி கோட்டைக்கு செல்லும் சாலைகளில் தற்காலிகமாக கிரஷர் பவுடரில் ஜல்லி கலந்து பள்ளங்களை சரி செய்தனர். வழி நெடுகிலும் செடி கொடிகளை அகற்றினர். வெங்கட்ரமணர் கோவில் வளாகத்தில் ஜெனரேட்டர்கள் மூலம் மின் விளக்கு வசதியும் செய்திருந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பரிவட்டம் கட்டி, பூரண கும்ப மரியாதை செய்ய தயார் நிலையில் இருந்தனர். செஞ்சி கோட்டை ராஜகிரி கோட்டைக்கு வந்த சுற்றுலா பயணிகளை பகல் 1 மணி முதல் மலை மீது ஏற அனுமதிக்க வில்லை. மாலை 3 மணிக்கு மலை மீதிருந்து சுற்றுலா பயணிகளையும் கீழே இறக்கி விட்டனர். இதன் பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜகிரி கோட்டையில் யாரையும் அனுமதிக்க வில்லை. மாலை 4.30 மணி முதல் கவர்னரை வரவேற்க பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் காத்திருந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலைக்கு சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி திருவண்ணாமலைக்கு திரும்பி வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் மாலை 6.30 மணிக்கு பிறகே திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டார். செஞ்சிக்கு வரும் போது இரவு 7.15 மணியானது. இரவில் செஞ்சி கோட்டைக்கு செல்லும் வழியில் மின் விளக்கு வசதி இல்லாததாலும், விட்டு விட்டு மழை பொழிந்ததாலும் கவர்னர் ஆர்.என்.ரவி செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதை ரத்து செய்து விட்டு நேராக சென்னை சென்றார்.