பதிவு செய்த நாள்
14
ஆக
2023
04:08
கூடுவாஞ்சேரி : நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, நந்திவரம் கிருஷ்ணாபுரத்தில், திருவீதி அம்மன் கோவில் உள்ளது. ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
அதை தொடர்ந்து, காப்பு கட்டிய பக்தர்கள் பால்குடம் எடுப்பதற்காக, கன்னியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து பால்குடம் எடுத்து, பம்பை, உடுக்கை, மேளத்துடன் ஊர்வலமாக கோவில் வளாகம் வந்தடைந்தனர். பின், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. அதில், பெண் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை 4:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் திருவீதி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
விளம்பூர் முத்தாலம்மன்: செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட விளம்பூர் கிராமத்தில், முத்தாலம்மன், பொன்னியம்மன் திருகோவில் உள்ளது. இங்கு, ஆடி உற்சவம் ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்படும். அதேபோல், இந்த ஆண்டும் விழாவை விமரிசையாக நடத்த, கிராம மக்கள் முடிவு செய்தனர். அதையொட்டி, 76ம் ஆண்டு ஆடி உற்சவம், கடந்த 6ம் தேதி காப்புக்கட்டி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான பால் சாகை வார்த்தல் நிகழ்ச்சி, நேற்று மதியம் 2:45 மணிக்கு முத்தாலம்மன், பொன்னியம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. பக்தர்கள் காவடி எடுத்தல், பழம் குத்துதல், அலகு குத்துதல், செடல் ஏந்துதல், வண்டி இழுத்தல் என, பல்வேறு விதமாக தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர். இரவு, மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முத்தாலம்மன், பொன்னியம்மன் வீதியுலா நடந்தது. விளம்பூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.