ஆவணி மாத பிறப்பு முதல் பார்வைக்காக கோயில் நடை திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஆக 2023 05:08
சாயல்குடி; சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடியில் உமையநாயகி அம்மன் கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்றதாகும். இங்குள்ள மூலவர் உமையநாயகி அம்மன் கூரையின்றி வெயிலிலும் மழையிலும் திருமேனி படும் வண்ணம் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இங்கு கடந்த ஜூலை 16 அன்று ஆடி மாத பிறப்பை முன்னிட்டு முதல் நாள் ஆனி 31 அன்று மாலை 7:00 மணியளவில் கோயில் நடை அடைக்கப்பட்டது. ஆடி மாதம் முழுவதும் நிறைவடைந்த பின்னர் நேற்று ஆவணி மாத பிறப்பை முன்னிட்டு முதல் பார்வை நிகழ்ச்சிக்காக அதிகாலை 4:00 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பொதுவாக ஆடி மாதம் என்றால் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. அந்த மாதத்தில் முளைக்கொட்டு உற்ஸவம், சிறப்பு தரிசனம், கூழ் காய்ச்சி ஊற்றுதல் உள்ளிட்ட பூஜைகள் நடக்கும். ஆனால் இங்குள்ள அம்மனுக்கு மட்டும் ஆடி மாதம் முழுவதும் கோயில் நடை அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அச்சமயத்தில் யாரும் பக்தர்கள் கோயிலுக்கு செல்வதில்லை. கோயில் நிர்வாகிகள் கூறியதாவது; ஆடி மாதத்தில் உமையநாயகி அம்மன் இங்கிருந்து ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்களில் புனித நீராடுவதற்காக செல்வதாக ஐதீகம் (சம்பிரதாயம்) உள்ளது அதுவரை கோயில் கதவு பூட்டப்பட்டிருக்கும் கருவறை வாசல் படி முன்பு பச்சரிசி தவிடு பரப்பப்பட்டு வெளியே சென்று திரும்பிய அம்மனின் திருவடி பாதச்சுவடு தென்பட்டுள்ளதாக புராண வரலாறு கூறப்படுகிறது. ஆவணி முதல் பார்வை தரிசனத்திற்காக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்து திரும்புகின்றனர் என்றனர். கோயிலில் யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், கோமாதா பூஜை உள்ளிட்டவைகளுக்கு பின்பு ஏராளமானார் கோயில் வளாகத்தில் பொங்கலிட்டு, நேர்த்திக்கடன் பூஜைகளை செய்தனர்.