பதிவு செய்த நாள்
21
ஆக
2023
05:08
ஏரல்: உமரிக்காடு முத்தாரம்மன் கோயில் கொடைவிழா வரும் 29ஆம் தேதி நடக்கிறது. இதைமுன்னிட்டு கோயிலில் கால்நாட்டப்பட்டது.
அன்றைய பாண்டிய மன்னர்கள் பாண்டிய நாட்டில் கிடைத்த முத்துக்களை எல்லாம் ஆரமாக கோர்த்து உமரிக்காட்டில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அன்னைக்கு அணிவித்ததால் அம்மன் முத்தாரம்மன் என்று சான்றோர்களாலும், பக்தர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்டாள். உமரிக்காடு முத்தாரம்மன் கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆவணி மாதம் இரண்டாம் செவ்வாய்க்கிழமைகொடைவிழா கோலாகலமாக நடக்கிறது. கொடை விழா நாட்களில் சென்னை, கோவை திருப்பூர், மும்பை, பெங்களூரு உள்ளிட்ட தமிழகத்தின் பலபகுதியில் இருந்தும் பொதுமக்கள் கொடை விழாவில் கலந்து கொள்வர். இந்த ஆண்டு கொடைவிழா நிகழ்ச்சிகள் வரும் 25ம்தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடக்கிறது. முக்கிய விழாவான அம்மன் கொடை விழா வரும் 29ஆம் தேதி நடக்கிறது. 25ஆம் தேதி நடக்கும் தொடக்க விழாவில் இரவு 7:00 மணிக்கு அம்பாளுக்கு தீபாராதனை மற்றும் வில்லிசை நிகழ்ச்சி நடக்கிறது. 26, 27 ஆம் தேதி அம்பாளுக்கு தீபாராதனை, பக்தி சொற்பொழிவு, இன்னிசை பட்டிமன்றம் நடக்கிறது. 28ஆம் தேதி அம்பாள் மாக்காப்பு, தீபாராதனை, நாதஸ்வரம், கரகாட்டம் ஆகியவை நடக்கிறது. 29ஆம் தேதி கொடைவிழாஅன்று காலை அம்பாள் அபிஷேகத்திற்கு தாமிரபரணி கடல் சங்கு முகம் சென்று புண்ணிய தீர்த்தம் கொண்டு வருதல், காலை 7 மணிக்கு அம்பாள் தீபாராதனை காலை மற்றும் மதியம் அன்னதானம், மாலையில் அம்பாள் அபிஷேகத்திற்கு பொருனை நதியிலிருந்து புண்ணிய தீர்த்தம் கொண்டு வருதல், இரவு 7 மணிக்கு அன்னதானம் மற்றும் அம்பாளுக்கு தீபாரதனை, இரவு 12 மணிக்கு அம்பாள் சிறப்பு அலங்கார தீபாரதனை, தொடர்ந்து ஸ்ரீமன் நாராயணசுவாமிக்கு பொங்கல் இடுதல், நள்ளிரவு பார் விளையாட்டு அதைத்தொடர்ந்து மாவிளக்கு, கயிறு சுற்றி ஆடுதல், ஆயிரம் கண் பானை, முளைப்பாரி எடுத்தல், நேமிசம்கொண்டு வருதல், ஆகிய நிகழ்ச்சிகளும் அதிகாலை 2.30 மணிக்கு அம்பாள் தங்கசப்ரத்தில் எழுந்தருளி யானை மற்றும் குதிரை படைமுன் செல்லபவனி வந்து ஊர் மக்களுக்கு அருள் புரியும் அற்புத நிகழ்ச்சி முக்கிய நிகழ்ச்சியாக நடக்கிறது. கொடைவிழாவை முன்னிட்டு உமரிக்காடு கிராமம் முழுவதும் பந்தல், மின்விளக்குகள், அலங்கார தோரணங்கள், சிறப்பு அலங்காரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கொடைவிழா ஏற்பாடுகள் அனைத்தையும் உமரிக்காடு கிராம விவசாய சங்கதலைவர் கார்த்தீசன் நாடார் தலைமையில் நிர்வாகஸ்தர்கள் சாந்த சுரேஷ் நாடார், மணிகண்டன் நாடார், பிரபாகர் நாடார் கோட்டாளம் நாடார் மற்றும் கணக்கர் ரமணிதரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.