சூலூர்: சூலூர் எம்.ஜி.ஆர்., நகர் ஸ்ரீ வெற்றிவேல் விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சூலூர் எம்.ஜி.ஆர்., நகரில் உள்ளவெற்றிவேல் விநாயகர் கோவில் பழமையானது. இங்கு, புதிதாக ஆலயம் மற்றும் விமானம் கட்டும் திருப்பணிகள் நடந்தன. பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா, நேற்று காலை, 9:00 மணிக்கு விநாயகர் பூஜையுடன் துவங்கியது. மாலை, 6:00 மணிக்கு வாஸ்து சாந்தி, கும்பஸ்தானம் மற்றும் முதல் கால ஹோமம் மற்றும் பூர்ணாகுதி நடந்தது. இன்று காலை, 7:30 மணிக்கு இரண்டாம் கால ஹோமம் மற்றும் பூர்ணாகுதி நடந்தது. புனித நீர் கலசங்கள் மேளதாளத்துடன் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டன. காலை 10:00 மணிக்கு விமானத்துக்கும், தொடர்ந்து வெற்றிவேல் விநாயகருக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் விநாயகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.