பதிவு செய்த நாள்
23
ஆக
2023
01:08
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே சந்திரன் கோவிலில், சந்திரயான் – 3, விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிக்கரமாக இறங்குவதற்காக சிறப்பு வழிபாடு நடந்தது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில், நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் -3 என்ற விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கடந்த ஜூன்.14ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான் -3 விண்கலத்தில் இருந்து பிரிந்து, விக்ரம் லேண்டர் இன்று (23ம் தேதி) மாலை 6:04 மணியளவில் நிலவில் தரையிறங்க உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்நிலையில், தஞ்சாவூர் திருவையாறு அருகே திங்களூரில் கைலாசநாதர் கோவிலில், நவரக்கிர பரிகாரத் தலமான சந்திரன் தனி சன்னதியில் மேற்கு நோக்கி அருள்பாலித்து வருவதால், தோஷ நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். இதனால், சந்திரயான்- 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்குவதற்காக, சந்திரனுக்கு மஞ்சள், சந்தனம், தயிர், பால், திரவியப்படி உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், அலங்கரிக்கப்பட்ட சந்திரனுக்கு மகா தீபாரணை கட்டப்பட்டது. மேலும், சந்திரனால் எந்த இடையூறும் ஏற்படாத வகையில் சந்திரனுக்குரிய சிறப்பு மந்திரங்கள் சொல்லப்பட்டது. இதில் ஏராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.