பதிவு செய்த நாள்
23
ஆக
2023
01:08
அம்பாசமுத்திரம்: மத நல்லிணக்கமாக, கும்பாபிஷேகத்தன்று இந்து கோவிலுக்கு வந்த இஸ்லாமியர்கள் கோவில் நிர்வாகிகளை ஆரத் தழுவி வாழ்த்தி, கடிகாரம் வழங்கி மகிழ்ந்தனர்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் மணலோடை தெருவில் புதிதாக நிர்மாணிக்கப் பட்டுள்ள தங்கம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. கோவில் நிர்வாகம் சார்பில் அப்பகுதி இஸ்லாமியர்களுக்கு கும்பாபிஷேக அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு, அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. இதனையேற்று, அம்பாசமுத்திரம் ஜாமி ஆ பள்ளி வாசல் தலைவர் அமனுல்லா கான், இமாம் முகம்மது ஷா, முகைதீன்ஜும்மாபள்ளி வாசல் செயலாளர் மஜீத், ஜமாத்தார்கள் உமர் அலி, உல்பத் ஜான், லூக்மான், சம்சு தீன், நஜ்முதீன், ஜலில் மற்றும் ஜமாத் இளைஞர் அணியினர் என சுமார் 20க்கும் மேற் பட்ட இஸ்லாமியர்கள் கும்பாபிஷேகத்தன்று மாலையில் தங்கம்மன் கோவிலுக்கு வந்தனர். அவர்களை, கோவில் நிர்வாகம் சார்பில் கல்யா ணராமன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். கோவில் நிர்வாகிகளை ஆரத் தழுவி வாழ்த்திய ஜமாத்தார்கள் கோவிலுக்கு கடிகாரத்தை பரிசாக வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.