23 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பகவதி மலையம்மன் கோவில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2023 01:08
தியாகதுருகம்: புக்குளம் பகவதி மலையம்மன் கோவில் தேர் திருவிழா இன்று நடந்தது.
தியாகதுருகம் மலை மீது நூற்றாண்டு பழமையான பகவதி மலையம்மன் கோவில் உள்ளது. இதன் தேர்த்திருவிழாவை புக்குளம் பகுதி மக்கள் ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் கொண்டாடி வருகின்றனர். கடந்த 23 ஆண்டுகளுக்கு முன் தேர் பழுதடைந்ததால் திருவிழா தடைப்பட்டு நடைபெறவில்லை. இதையடுத்து ஊர் பொதுமக்கள் சார்பில் நன்கொடை திரட்டி ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய தேர் வடிவமைக்கப்பட்டு கடந்த மாதம் வெள்ளோட்டம் நடந்தது. அதைத் தொடர்ந்து கடந்த 15ம் தேதி காப்பு கட்டி கொடியேற்றி திருவிழா துவங்கியது. தினமும் அம்மன் திருவீதி உலா நடந்தது. இன்று தேர்த்திருவிழாவை முன்னிட்டு காலையில் மூலவர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் பகவதி மலையம்மனை தேரில் வைத்து பக்தர்கள் வடம் பிடித்து ஊர்வலமாக இழுத்துச் சென்றனர். பகவதி மலையம்மனுக்கு 23 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.