தேவகோட்டை: தேவகோட்டை புதிய ராஜநாகேஸ்வரி அம்மன் கோயிலில் பூச்சோரிதல் விழா கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடந்தன. பெண்கள் திரு விளக்கு பூஜை நடத்தினர். நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடனாக பாலாபிஷேகம் செய்தனர். இதனைத் தொடர்ந்து ராஜநாகேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடந்தன. நூற்றுக்கணக்கான பக்தர்கள் தட்டுகளில் பூக்கள் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனை பூச்சோரிதல் செய்து வழிபட்டனர். தேவி கருமாரி அம்மன் கோயிலில் திருவிழா கடந்த 15 ந்தேதி கணபதி ஹோமம், காப்புகட்டுதலுடன் துவங்கியது. தினமும் மாலையில் கருமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர். நேற்று கொளுத்தும் வெயிலில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். ஆண் பக்தர்களுடன் பெண் பக்தைகளும் அலகு குத்தி வேல்காவடி, மயில்காவடி எடுத்துவந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் பூச்சோரிதல் செய்து வழிபட்டனர். முக்கிய வீதிகள் வழியே கரகம் எடுத்து வந்து அம்மனுக்கு செலுத்தி பூஜை செய்தனர்.