பதிவு செய்த நாள்
30
ஆக
2023
12:08
தமிழகத்தில் பரவலாக இருக்கும் வாக்கிய பஞ்சாங்கத்தில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி செப்.18 வரவுள்ள நிலையில் அதற்கு ஒருநாள் முன்பாக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இது ஆதின கர்த்தாக்கள், மடாதிபதிகள், ஹிந்துக்களுக்கு சங்கடத்தை ஏற்டுத்தியுள்ளது.
பஞ்சாங்க கணிப்பாளர்கள் கூறியதாவது: பஞ்சாங்கம் என்பது திதி, நட்சத்திரம், யோகம், கரணம், வாரம் ஆகிய ஐந்து விஷயங்களின் தொகுப்பு. திருக்கணிதம், வாக்கியம் என பஞ்சாங்கத்தில் இரு வகை உண்டு. இரண்டிற்கும் 17 நாழிகை என்னும் ஆறு மணி நேரம், 48 நிமிடம் வரை வேறுபாடு ஏற்படும். சில நேரங்களில் 12 மணி நேரம் வரை வித்தியாசப்படும்.சந்திரன் இயக்க நிலையில் ஏற்படும் வித்தியாசத்தை கணக்கில் கொண்டு திருத்தப்பட்டதாக திருக்கணித பஞ்சாங்கம் வெளிவருகிறது. கணிதத்தில் மாறுதல் செய்யாமல் பழமையை அப்படியே பிரதிபலிப்பது வாக்கிய பஞ்சாங்கம். தமிழகத்தில் அதிகளவில் பயன்படும் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்.18லும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்.19லும் தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட வேண்டும். ஆனால் விநாயகர் சதுர்த்தி விடுமுறையை செப்.17 என அரசு எதன் அடிப்படையில் அறிவித்தது எனத் தெரியவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினார்.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி: தருமை ஆதீனம், திருப்பனந்தாள் காசிமடம் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை. இங்கு வாக்கியப் பஞ்சாங்கம் (பாம்பு பஞ்சாங்கம்) பின்பற்றப்படுகிறது. புரட்டாசி முதல் நாளான செப்., 18ம் தேதி, விநாயகர் சதுர்த்தி என குறிப்பிடப்பட்டுள்ளது. திருவாவடுதுறை ஆதீனம், திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவிலிலும், இந்தப் பஞ்சாங்கமே பின்பற்றப்படுகிறது. சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் செப்.18ல் தேரோட்டமும், மறுநாள் தீர்த்தவாரியும் நடக்கிறது. அனைத்து கோயில்களிலும் புரட்டாசி முதல்நாளில் (செப்.18) தான் விநாயகர் சதுர்த்தி நடக்கவிருக்கிறது.
ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார், மயிலாடுதுறை: சவுரமானம், சாந்திரமானம் என இரு விதங்களில் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. சூரியனின் சஞ்சாரத்தை கொண்டு கணக்கிடப்படுவது சவுரமானம். இதை சித்திரை முதல் பங்குனி வரை என வரிசைப்படுத்துவர்.
வளர்பிறை, தேய்பிறையின் அடிப்படையில் அமாவாசைக்கு மறுநாளான பிரதமை முதல் அமாவாசை வரை கணக்கிடுவது சாந்திரமானம். இதையே சைத்ரம், வைசாகம் என்னும் மாதங்களாகச் சொல்வர்.சவுரமானத்தின் அடிப்படையில் கோயில் திருவிழாக்களும், சாந்திரமானத்தின் அடிப்படையில் விநாயகர் சதுர்த்தி, கந்தசஷ்டி உள்ளிட்ட விரதங்களும் கடைபிடிக்கப்படும்.இதில் பாத்ரபத மாதத்தின் வளர்பிறை சதுர்த்தியன்று வருவது விநாயகர் சதுர்த்தி. இது ஆவணி அல்லது புரட்டாசியில் வரும். ஆவணி மாத அமாவாசைக்கு மறுநாள் (செப்.15) பாத்ரபத மாதம் பிறக்கிறது. எனவே பாத்ரபத மாத வளர்பிறை சதுர்த்தியை(செப்.18) கணக்கில் கொண்டால் குழப்பம் நேராது.
ஜோதிடர் ஹரிகேசநல்லுார் வெங்கட்ராமன், சென்னை: இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி செப்., 18 அன்று வருகிறது. ஆவணி மாத அமாவாசையில் இருந்து நான்காம் நாளே விநாயகர் சதுர்த்தி. இந்த விஷயத்தில் குழப்பம் தேவையில்லை. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி புரட்டாசி முதல் நாளில் தான் வருகிறது. ஒருமுறை இதே போல நவராத்திரி புரட்டாசியில் தொடங்கினாலும், சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஐப்பசியில் வந்தன. அதுபோலவே விநாயகர் சதுர்த்தியும் இந்த ஆண்டு புரட்டாசியில் வருகிறது.
பரணீதர சாஸ்திரிகள், ஆஸ்திகதர்மம் பஞ்சாங்கம் வெளியீட்டாளர், ஸ்ரீமடம், காஞ்சிபுரம்: காஞ்சி சங்கர மடத்தில் பண்டிதர்கள், பஞ்சாங்க வெளியீட்டாளர்கள் பங்கேற்ற சதஸ் எனும் கூட்டம் நடந்தது. இதில் செப்.,18 அன்று விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைத்து கோயில்களிலும் செப்.18 அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்நாளை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு பல்வேறு அமைப்பினர் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ள நிலையில் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விடுமுறையை செப்.18க்கு மாற்றி அறிவிக்க வேண்டும். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இதில் கவனம் செலுத்த வேண்டும். - நமது நிருபர் -
ஹிந்து முன்னணி கண்டனம் ; விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாள் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டதற்கு ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: இந்த ஆண்டின் தமிழக அரசின் விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு ஜனவரியில்வெளியான போதே விநாயகர் சதுர்த்தி விழா செப்., 17 என்று இருந்ததை சுட்டிக்காட்டி உடனே திருத்தம் வெளியிட கேட்டோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் உள்நோக்கம் உடையது. ரம்ஜான் விடுமுறை குறித்து ஆண்டு துவக்கத்தில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டாலும் முதல் நாள் மாலைபிறை தெரியவில்லை என்றால் அதற்கு அடுத்த நாள் விடுமுறையை மாற்றி தமிழக அரசு அரசாணைவெளியிடுகிறது. தமிழகத்தில் 88 சதவீதம் உள்ள ஹிந்துக்கள் அனைவரும் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை தவறான தேதியில் அறிவித்ததை சுட்டிகாட்டிய பிறகும் தமிழக அரசு திருத்தி வெளியிடாததை கண்டிகிறோம். விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை செப்., 18 என அரசாணை வெளியிட வேண்டும். வரும் காலத்தில் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படாமல் தமிழக அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.