பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் கஜேந்திர மோட்ச லீலை விழா நடந்தது.
இக்கோயிலில் கஜேந்திர மோட்ச திருவிழா குழுவினரால், முதலாம் ஆண்டு கஜேந்திர மோட்ச லீலை நடத்தப்பட்டது. இதன்படி நேற்று மாலை 5:00 மணிக்கு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து 6:00 மணிக்கு பெருமாள் கோயில் அருகில் வைகை ஆற்றில் இறங்கி மண்டகப்படியில் அமர்ந்தார். அங்கு இரவு 8:00 மணிக்கு கஜேந்திர மோட்ச லீலை நடந்தது. இதன் படி கஜேந்திரன் எனப்படும் யானைக்கு முதலையிடம் இருந்து மோட்சம் அருளும் வைபவம் ஏராளமான பக்தர்கள் மத்தியில் கோலாகலமாக நடத்தப்பட்டது. வைகை ஆற்றில் மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இரவு 10:00 மணிக்கு பெருமாள் ரத வீதிகளில் வீதி உலா வந்து கோயிலை அடைந்தார். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.