அம்மன் மயில் உருவில் சிவனை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2023 10:09
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மாயூரநாதர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. பழமை வாய்ந்த இக்கோயிலில் 18 ஆண்டுகளுக்கு பிறகு இக்கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னிட்டு திருப்பணி செய்யப்பட்டு கோயில் முழுவதும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த புதன்கிழமை முதல் காலை யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது. கடந்த 5 நாட்களாக சிவநெறி சொற்பொழிவுகள், இன்னிசை மற்றும் பரதநாட்டிய கச்சேரி, 82 மணி நேரம் தொடர்ச்சியாக அகண்ட பாராயணம் ஆகிய பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இன்று காலை எட்டாம் கால யாகசாலை பூஜை திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. தொடர்ந்து மகாபூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டு, கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து கோயில் பிரகாரத்தை சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்து அங்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 7.30 மணி அளவில் நடைபெற்ற இந்த கும்பாபிஷேகத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் துலாவூர் ஆதீனம் செங்கோல் ஆதீனம் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி பாஜக மாவட்ட தலைவர் அகோரம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.