4000 கி.மீ., ரோட்டில் படுத்து எழுந்தபடி பயணித்து ராமேஸ்வரம் வந்த சாதுக்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2023 10:09
ராமேஸ்வரம்: உத்தரகாண்ட் முதல் ராமேஸ்வரம் கோயில் வரை சாதுக்கள் 4000 கி.மீ., ரோட்டில் படுத்து எழுந்தபடி பயணித்து சுவாமி தரிசனம் செய்தனர்.
உத்தரகாண்ட் கங்கோத்திரியில் புனித நீராடிய சாதுக்கள் தாமோதரதாஸ், மோனி பாபா, துளசிதாஸ் உள்ளிட்ட 7 பேர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முடிவு செய்தனர். அதன் படி ஜூன் 2022ல் கங்கோத்திரியில் இருந்து 3 சாதுக்கள் மட்டும் படுத்து எழுந்தபடி பயணத்தை துவக்கினர். இவர்கள் உ.பி., ம.பி., குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா வழியாக தமிழகம் வந்தவர்கள் நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். தினமும் ரோட்டில் 10 கி.மீ., படுத்து எழுந்தபடி பயணித்து 13 மாதத்தில் 4000 கி.மீ., வந்துள்ளனர். இவர்களுக்கு உதவியாக 4 சாதுக்கள் காரில் வழிகாட்டியபடி வந்தனர். நேற்று காலை ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தனர். பின் காரில் கங்கோத்திரி செல்ல உள்ளதாக சாதுக்கள் தெரிவித்தனர்.