பதிவு செய்த நாள்
04
செப்
2023
04:09
துடியலூர்: துடியலூரில் உள்ள அரவான் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
துடியலூர், சந்தைப்பேட்டை மைதானம் அருகே அரவான் கோவில் உள்ளது. சுமார், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோவில் புனரமைப்பு செய்யப்பட்டு, கும்பாபிஷேக விழா நடந்தது. இங்குள்ள அரவான், பால விநாயகர், பால ஆஞ்சநேயர் கோவில்களில் திருநெறிய தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடந்தது. விழாவையொட்டி, முளைப்பாரி தீர்த்த குடங்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, அம்மன் வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இரண்டாம் நாளில் முதல் கால வேள்வி பூஜை மற்றும் மங்கல இசையுடன் விழா நடந்தது. விழாவையொட்டி, பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தீர்த்தங்கள், கோவில் கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரவான் திருக்கோவில் திருப்பணி குழுவினர் செய்து இருந்தனர்.