நத்தம், நத்தம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து ஓராண்டு நிறைவையொட்டி இன்று நடந்த வருடாபிஷேக பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பிரசித்தி பெற்ற நத்தம் மாரியம்மன் கோவிலில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7 கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து இன்று காலையில் வருடாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கோவில் வளாகத்தில் சிறப்பு யாகசாலை அமைக்கப்பட்டு சிவச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் வைக்கப்பபட்டிருந்த 108 வலம்புரி சங்குகளும், பூஜை பொருட்களும், புனித தீர்த்த குடங்களும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பின்னர் மூலவர் மாரியம்மனுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், இளநீர், தீர்த்தம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்களும், மஹா தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து அம்மன் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி சுற்றுவட்டார மற்றும் வெளி மாவட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.