பதிவு செய்த நாள்
11
செப்
2023
10:09
திருவனந்தபுரம்: கேரளாவில் பாதிரியார் ஒருவர் சபரிமலை அய்யப்பனை தரிசிக்க விரதமிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, தேவாலய சேவைக்கான உரிமத்தை அவர் திருப்பி அளித்து உள்ளார்.
கேரளாவில், மார்க்., கம்யூ.,யைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான மனோஜ், தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். இவருக்கு தேவாலயத்தில் சேவை செய்ய திருச்சபையால் உரிமம் வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், பிரசித்திபெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல விரும்பிய மனோஜ், இதற்காக, 41 நாள் விரதத்தை மேற்கொண்டு உள்ளார். இது குறித்து அறிந்த தேவாலய நிர்வாகம், அவரிடம் கேள்வி எழுப்பியதுடன், கிறிஸ்துவ கோட்பாடுகள், விதிகளை மீறியதாக குற்றஞ்சாட்டினர். இதை ஏற்றுக் கொண்ட அவர், தேவாலய சேவைக்காக தனக்கு அளிக்கப்பட்ட உரிமம் மற்றும் அடையாள அட்டையை திருப்பி அளித்துள்ளார்.
இது குறித்து மனோஜ் கூறியதாவது: என் சபரிமலை பயணத்தால், தேவாலய நிர்வாகத்துக்கு எந்த சிரமும் அளிக்க விரும்பவில்லை. அவர்களின் நிலைப்பாட்டை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நான் எந்த தவறும் செய்யவில்லை என உறுதியாக நம்புகிறேன். கிறிஸ்துவ மதத்தைப் போலவே ஹிந்து மதத்தையும் புரிந்து கொள்வதே என் நோக்கம். விரதத்தை தொடர்கிறேன். வரும் 20ம் தேதி சபரிமலை செல்வது உறுதி. தேவாலய சேவைக்கான உரிமத்தை மட்டும்தான் திருப்பி தந்துள்ளேன். பாதிரியாராக என் பணி தொடரும். இவ்வாறு அவர் கூறினார். சபரிமலை செல்வதற்கான கறுப்பு வேட்டியுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் சூழலில், தனக்கு எதிரான கருத்துக்களுக்கு பதிலளித்துள்ள மனோஜ், சாதி, மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவரையும் நேசிக்க கடவுள் கேட்டுக் கொண்டுள்ளார். பிறரை நேசிப்பது அவர்களின் செயல்களோடு நம்மை சேர்க்கிறது. நான் கடவுளின் கோட்பாட்டை பின்பற்றுகிறேன்,” என குறிப்பிட்டு உள்ளார்.