திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பச்சைசாத்தி கோலத்தில் சண்முகர் வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12செப் 2023 10:09
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் ஆவணித் திருவிழாவில் நேற்று சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் இரவு சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளியம்மன் சிவன் கோயிலில் இருந்து பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. ஆவணி திருவிழா 8ம் நாளான நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. 5 மணிக்கு வெங்கு பாஷா மண்டபத்தில் இருந்து சுவாமி சண்முகர் வெள்ளை நிற பட்டு அணிந்து வெள்ளை நிற மலர்கள் சூடி வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து சிவன் கோயிலை அடைந்தார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. பந்தல் மண்டபத்தில் உள்ள பச்சை சாத்தி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. பகல் 12.05 மணிக்கு சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானை அம்மனுடன் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை நிறப்பட்டு அணிந்து பச்சை நிற மலர்கள் சூடி பச்சை சாத்திக்கோலத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பச்சை பட்டு சாத்தி வழிபட்டனர். ஆவணி திருவிழாவில் முக்கிய நிகழ்சியான 10 நாளான நாளை 13ம் தேதி காலை 6:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், கோயில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.