ஹிந்து மதம் அறிவு சார்ந்தது; சுவாமி சிவயோகானந்தா நெகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13செப் 2023 06:09
மதுரை: ”ஹிந்து மதம் அறிவு சார்ந்தது”, என மதுரை சின்மயா மிஷன் தலைவர் சுவாமி சிவயோகானந்தா தெரிவித்தார்.
மதுரை காஞ்சி காமகோடி பீட மடத்தில் பகவத் கீதை சொற்பொழிவு நடக்கிறது. தலைவர் ராமசுப்ரமணியன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் வெங்கட்ரமணி, குமார், ராமகிருஷ்ணன், வெங்கடேசன், ஸ்ரீராமன் , பரத்வாஜ், ஸ்ரீதர் கலந்து கொண்டனர். சுவாமி சிவயோகானந்தா பேசியதாவது: ஒளிவு, மறைவுவற்ற மனிதர்களிடம் தான் கடவுள் அதிக ஈர்ப்பு கொண்டிருப்பார். மனிதனுக்கு கிடைக்கும் உண்மையான செல்வம் அறிவு. ஞானத்திற்கும், புத்திக்கும் உள்ள வித்தியாசத்தை பகவத் கீதையில் அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் உபதேசமாக வழங்கினார். மனிதன் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் தன்னுடைய எண்ணங்களை தவறாக மாற விடக்கூடாது. கடினமான சூழ்நிலையை கையாளும் போது புத்தியானது ஞானத்தை அடைவதற்கான வழியை தேடுகிறது. ஒரு செயலை செய்யும் முன் சோம்பேறித்தனம் நம்மை ஆட்கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பன்முகத் தன்மையோடு எந்த செயலிலும் ஆராய்ந்து செயல்பட வேண்டும். ஹிந்து மதம் அறிவு சார்ந்தது. வாழ்க்கையில் அனைவரும் ஏதாவது ஒன்றை அடைவது என்ற எண்ணம் இருக்க வேண்டும். அப்போது தான் ஞானம் என்பதை நோக்கி செல்ல மனம் முயலும். புத்தி என்பது லோக்சபா உறுப்பினர்கள் போன்றது. இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தான் ஞானம் எனும் பிரதமரை தேர்ந்தெடுக்கின்றனர். மனிதர்களும் மனதின் அனைத்து எண்ணங்களையும் ஒன்று சேர்த்து ஞானம் பெற முயல வேண்டும் என்றார். இன்றும், நாளையும் (செப். 13,14) மாலை 6:30 மணிக்கு சொற்பொழிவு நடக்கிறது. அனுமதி இலவசம்.