ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் மாறநாயனார் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14செப் 2023 11:09
இளையான்குடி: இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற மாறநாயனார் குருபூஜை விழாவில் ஏராளமான சிவனடியார்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சிவகங்கை சமஸ்தானம்,தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட ராஜேந்திர சோழீஸ்வரர், ஞானாம்பிகை அம்மன் கோவிலில் உள்ள மாறநாயனார் சன்னதியில் ஆவணி மகம் நட்சத்திரத்தை முன்னிட்டு மாறநாயனார் குருபூஜை விழாவிற்காக மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கும், மாறநாயனார், புனிதவதி அம்மையார் சுவாமிகளுக்கும் காலை 9:00 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் சிறப்பு திருமுறை கச்சேரி நடந்தது. அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. மாலை 5:30 மணிக்கு சூரியனார் கோவில் ஆதீனம் தவத்திரு.சிவாக்கர சுவாமிகள் எழுந்தருளி திருமுறை அருளாசி வழங்கினார். இதனைத் தொடர்ந்து மாறநாயனார் புராணம் வாசிக்கப்பட்டு ஜோதி காட்சி நடைபெற்றது. பின்னர் ராஜேந்திர சோழீஸ்வரர், ஞானாம்பிகை அம்மன்,மாறநாயனார், புனிதவதி அம்மையார் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மேள, தாளங்கள் முழங்க வீதி உலா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை மாறநாயனார் அடியார் திருக்கூட்டத்தினர் செய்திருந்தனர்.