பதிவு செய்த நாள்
21
செப்
2023
05:09
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் வண்ண விளக்குகள், வர்ணஜாலத்துடன் 49 விநாயகர் சிலைகளின் ஊர்வலம் நடந்தது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி சிங்கம்புணரியில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. செப்.20ம் தேதி இரவு விநாயகர் ஊர்வலம் நடந்தது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் 49 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. ஊர்வலத்திற்கு கிராம பிரமுகர் சத்தியசீலன் தலைமை வகித்தார். ஐயப்பன் கோயில் குருசாமிகள் வேதாசலம், தவமணி, ராமதாஸ், முருகன் முன்னிலை வகித்தனர். ஆன்மீக சொற்பொழிவாளர் பாரதி, பா.ஜ., ஓ.பி.சி அணி மாநில செயலாளர் பாண்டியராஜன் பேசினர். வெள்ளாளர் நலச்சங்க தலைவர் வீரபாண்டியன் ராஜமாணிக்கம் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஐயப்பன் கோயிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் சுந்தரம் நகர், பஸ் நிலையம் வழியாக சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் தெப்பத்தை அடைந்தது. அங்கு அனைத்து சிலைகளும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் விசர்ஜனம் செய்யப்பட்டது. டி.எஸ்.பி., ஆத்மநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாக்குழு தலைவர் தினேஷ், செயலாளர்கள் கண்ணையா, தங்கப்பாண்டி, விஜய், ஆர்.எஸ்.எஸ்., மாவட்டத் துணைத் தலைவர் குகன், கோட்ட இணைச்செயலாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.