பதிவு செய்த நாள்
23
செப்
2023
03:09
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உற்சவர் சிலைகள் செய்ததில், 8.7 கிலோ தங்க மோசடி வழக்கில், ஹிந்து சமய அறநிலையத் துறை முன்னாள் கமிஷனர், ஸ்தபதி உட்பட 11 பேர் மீது போலீசார், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 1,000 ஆண்டுகள் பழமையான சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை சேதமடைந்தது. இதனால், புதிய உற்சவர் சிலை செய்ய, ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், 2015ல் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஸ்தபதி முத்தய்யா வழிகாட்டுதலின்படி, புதிய சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை மற்றும் ஏலவார்குழலி அம்மன் சிலை என இரு சிலைகள், தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில் செய்யப்பட்டன.
உரிமை சட்டம்: புதிய சிலைகள் செய்வதில், 5 சதவீதம் தங்கம் சேர்க்க வேண்டும். அதாவது, 8.7 கிலோ தங்கம் சேர்க்க அறநிலையத் துறை உத்தரவில் உள்ளது. ஆனால், தங்கம் சேர்க்கப்பட்டதில், பல்வேறு சந்தேகம் எழுந்ததால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு தகவல்கள் பெறப்பட்டன. அதில், சிலை செய்வதற்காக, பக்தர்கள் வழங்கிய தங்கத்திற்கு ரசீது போடப்படவில்லை; சிலை செய்யும் போது வீடியோ, போட்டோ பதிவு செய்யப்படவில்லை; பக்தர்கள் முன்னிலையிலும் சிலை செய்யப்படவில்லை உள்ளிட்ட தகவல்கள் கிடைத்தன. இதை காரணமாக வைத்து, அண்ணாமலை என்பவரது புகாரின்படி, சிவ காஞ்சி போலீசார் வழக்கு பதிந்தனர். ஐ.ஐ.டி., நிபுணர் குழு வாயிலாக, புதிதாக செய்த உற்சவர் சிலைகளை ஆய்வு செய்ததில், சிலையில் துளிகூட தங்கம் இல்லை என, அப்போதைய ஏ.டி.எஸ்.பி., வீரமணி, நிருபர்களிடம் பேட்டியளித்தார். அதை தொடர்ந்து, ஸ்தபதி முத்தய்யா, கோவில் செயல் அலுவலர் முருகேசன், அர்ச்சகர் ராஜப்பா உள்ளிட்ட ஒன்பது பேர், சிலை மோசடி வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
கைது: பின், ஹிந்து சமய அறநிலையத் துறையின் முன்னாள் கமிஷனர் வீரசண்முகமணி, கூடுதல் கமிஷனர் கவிதா ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு, போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சிலை மோசடி குறித்த ஆவணங்கள், தகவல்களை தொகுத்த சிவ காஞ்சி போலீசார், மேற்கண்ட 11 பேர் மீதும், காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். போலீசார் கூறியதாவது: சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, விசாரணை சம்பந்தமான ஆவணங்கள் வைத்து, சிலை மோசடி வழக்கில் கைதான 11 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும், கும்பகோணம் நீதிமன்றத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நீதிமன்றத்திலிருந்து சில ஆவணங்கள் வர வேண்டியுள்ளது. அந்த ஆவணங்கள் கிடைத்ததும் விசாரணை துவங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய சிலையில் சேர்க்க வேண்டியஉலோகங்களின் சதவீதம் விபரம்:
தங்கம் 5 சதவீதம், வெள்ளி 1 சதவீதம், பித்தளை 12 சதவீதம், செப்பு 80 சதவீதம், ஈயம் 2 சதவீதம்.
சிலை எங்கே?: ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள உற்சவர் சிலை விவகாரம், 8 ஆண்டுகளாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், 15ம் நுாற்றாண்டில் விஜயநகர பேரரசு காலத்தில், இக்கோவிலுக்கு கொடுக்கப்பட்ட சோமாஸ்கந்தர் சிலை, பல ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்டு வெளிநாட்டில் உள்ளது. அதுகுறித்தும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்னும் வழக்குப்பதிவு செய்யாமல் உள்ளனர்.