பதிவு செய்த நாள்
25
செப்
2023
11:09
வாஷிங்டன்: அமெரிக்காவில் கட்டப்பட்டு வரும், பிரமாண்ட கோவிலின் கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியதை அடுத்து, அக்டோபர், 8ம் தேதி திறக்கப்பட உள்ளது.
இந்தக் கோவில், இந்தியாவிற்கு வெளியே கட்டப்பட்டுள்ள கோவில்களில், இரண்டாவது பெரிய கோவிலாக இருக்கும் என, நம்பப்படுகிறது. புதுடில்லியில் உள்ள அக்ஷர்தம் அமைப்புக்கு சொந்தமான லட்சுமி நாராயணன் கோவில் நிர்வாகத்தினர் தான், அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள ராப்பின்ஸ்வில்லே நகரிலும், இந்த பிரமாண்ட கோவிலை கட்டி வருகின்றனர். கண்கவர் கலைநயங்கள் மற்றும் வேலைப்பாடுகளுடன், இந்தக் கோவில், 183 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பகிறது. கடந்த, 2011ல் துவங்கிய இக்கோவிலின் கட்டுமானப் பணியில் பெரும்பகுதி நிறைவடைந்துள்ளதால், இதன் திறப்பு விழா அடுத்த மாதம், 8ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அனைத்து பணிகளும் முழு அளவில் நிறைவடைந்த பின், அக்டோபர், 18 முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. வேத முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ள இக்கோவிலில், 10,000 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. இந்திய கலை, கலாசாரம், பண்பாடு போன்றவற்றை எடுத்துரைக்கும் வகையில், இசைக்கருவி வாசிக்கும் மற்றும் நடன அசைவுகளுடன் கூடிய சிற்பங்கள் பலவும் இடம் பெற்றுள்ளன. கருவறையுடன் கூடிய பிரதான கோவில், 12 துணை கோவில்கள், ஒன்பது கோபுரங்கள், பிரமிடு வடிவிலான ஒன்பது கோபுரங்களுடன் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோடை வெயில், மழை, குளிர் உட்பட எந்த கால நிலையையும் தாங்கும் வகையில், உலகத் தரம் வாய்ந்த கிரானைட் மற்றும் பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.