பதிவு செய்த நாள்
25
செப்
2023
12:09
கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி அருகே மழை வேண்டி, மழை சோறு எடுத்து பெண்கள் வழிபாடு செய்தனர்.
தமிழ்நாட்டில் பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால், பல மாவட்டங்களில் பயிர்கள் கருகி விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். கொங்கு மண்டலத்திலும் மழையின்மை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி, கருமத்தம்பட்டி அடுத்த கணபதிபாளையம் கிராமத்தில் மழை வேண்டி, பெண்கள் மழைச்சோறு எடுத்து இன்று வழிபாடு நடத்தினர். சாணத்தில் பிள்ளையார் பிடித்து, அதை முக்காலி மேல் வைத்து, ஒரு பெண்ணும், ஒரு சிறுமியும் தலையில் சுமந்து கொண்டு வீடு, வீடாக சென்று பழைய சோற்றை வாங்கி வந்தனர். அதை விநாயகருக்கு படைத்து மழை வேண்டி வழிபாடு நடத்தினர். படையல் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். அதை தொடர்ந்து, அந்த பிள்ளையாரையும், பழைய சோற்றையும் அருகில் உள்ள கவுசிகா நதியில் விட்டனர். இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், மழைச்சோறு எடுத்து இறைவனை வழிபட்டால் மழை பெய்யும் என்பது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்து மூதாதையர்கள் கடைபிடித்து வந்த வழக்கமாகும். மழைச்சோறு எடுத்தபின், மழை பெய்ததை நாங்களும் பார்த்துள்ளோம். இந்தாண்டு போதிய மழை இல்லாததால், மழைச்சோறு எடுத்து வழிபட்டோம், என்றனர்.