பதிவு செய்த நாள்
26
செப்
2023
04:09
சென்னை:தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட, 900க்கும் மேற்பட்ட சிலைகளை மீட்க நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளோம், என, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சைலேஷ் குமார் யாதவ் கூறினார்.
மேலும், அவர் கூறியதாவது: தமிழகத்தில், ஹிந்து அறநிலையத் துறையின் கீழ், 36,000க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இவற்றில், 4.60 லட்சம் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அதில், 3,000த்துக்கும் மேற்பட்ட சிலைகள் காணாமல் போய் உள்ளன. இச்சிலைகள் எங்கு போனது, திருடிய நபர்கள் குறித்து விசாரித்து வருகிறோம். அந்த வகையில், அரியலுார் மாவட்டம், சுத்தமல்லி வரதராஜபெருமாள் கோவிலில் இருந்து, 20 சிலைகள் திருடு போனது பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுபாஷ் சந்திர கபூர் என்பவர், அமெரிக்காவில் குடியுரிமை பெற்றுள்ளார். அவர், தமிழகத்தில் உள்ள, சோழர் கால சிலைகள் மற்றும் கலைப் பொருட்களை அமெரிக்காவுக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. சர்வதேச போதை பொருள் கடத்தல்காரரான சுபாஷ் சந்திர கபூர், 2011ல், ஜெர்மனியில் கைது செய்யப்பட்டார். பின், சென்னைக்கு அழைத்து வந்து, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ஒரு வழக்கில், 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது. மற்ற வழக்குகள் விசாரணையில் உள்ளன.
சுபாஷ் சந்திர கபூரால் கடத்தப்பட்ட சிலைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அமெரிக்காவில் உள்ள, கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் இணையதளத்தில் படங்களை வெளியிட்டு வருகின்றன. அவற்றை கணகாணித்தும், தனியார் அமைப்புகளின் தகவல்கள் வாயிலாக, 900 சிலைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். திருடர்கள், இவர்களுக்கு உடந்தையாக இருக்கும் கோவில் நிர்வாகிகள், சிலைகளை வாங்கி விற்கும் புரோக்கர்கள், வெளிநாடுகளுக்கு கப்பல் மற்றும் விமானம் வாயிலாக கடத்துவோர் குறித்தும் விசாரித்து வருகிறோம். தமிழகத்தில் இருந்து நேபாளம் வழியாக, சிங்கப்பூர் சென்று அங்கிருந்து வெவ்வேறு நாடுகளுக்கு சிலை கடத்தல் நடப்பது தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.
மீட்ட 3 அடி நடராஜர் சிலை; சென்னை வேப்பேரி அருகே, சூளை ஜெனரல் காலின் சாலையில் உள்ள, தனியார் கல்லுாரி அருகே, நேற்று மாலை, 3:00 மணியளவில், துாய்மை பணியாளர்கள் பரமேஸ்வரி, கவுரி ஆகியோர் அந்த இடத்தில் உள்ள, கோணி பையை பார்த்தனர். அதில், 3 அடி உயர நடராஜர் சிலை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து துப்புரவு ஆய்வாளர் தேவதாசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் சிலையை மீட்டு, அதன் தொன்மை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். பஞ்சலோக சிலை மாதிரி தெரியவில்லை. முழுமையான ஆய்வுக்கு பின், சிலை எந்த பொருளில் செய்யப்பட்டது என்பது குறித்து தெரியவரும் என்கின்றனர் போலீசார்.