பதிவு செய்த நாள்
29
செப்
2023
10:09
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மலையையே பக்தர்கள் சிவனாக வழிபட்டு வருகின்றனர். இதனால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பவுர்ணமிதோறும் லட்சக்கணக்கான பக்தர்களும், 14 கி.மீ., துாரம் சுற்றளவு கொண்ட அண்ணாமலையார் மலையை வலம் வந்து அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு வருகின்றனர்.
இதில், புரட்டாசி மாத வளர்பிறை பவுர்ணமி திதி, நேற்று மாலை, 6:47 மணி முதல், இன்று மாலை, 4:34 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்பதால், நேற்று மாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும், அருணாசலேஸ்வரர் கோவிலில், 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டனர். இந்நிலையில், பவுர்ணமி தினத்தன்று, கட்டண தரிசனம் கிடையாது. அனைவரும் தர்ம தரிசனத்தில் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என அறநிலையத்துறை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை மீறி, நேற்று, பக்தர்களிடம், 50 ரூபாய் கட்டண தரிசனம் மற்றும் தர்ம தரிசனம் என, சுவாமியை வழிபட பக்தர்கள் அனுமதித்தனர்.