பதிவு செய்த நாள்
29
செப்
2023
05:09
திருவண்ணாமலை: திருவண்ணாமலையிலுள்ள, 14 கி.மீ., சுற்றளவுள்ள அண்ணாமலையார் மலையை, மாதந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு செல்கின்றனர். இவ்வாறு செல்லும் பக்தர்கள், வழியிலுள்ள சாதுக்களுக்கு, உணவு, பணம், துணி உள்ளிட்டவற்றை தர்மம் வழங்குகின்றனர். இதனால், நிரந்தரமாக, 5,000 க்கும் மேற்பட்ட சாதுக்கள் கிரிவலப்பாதையில் தங்கி, பிச்சை எடுத்து வருகின்றனர். பவுர்ணமி நாட்களில் மட்டும், 20,000 க்கும் மேற்பட்ட சாதுக்கள் வெளிப்பகுதிகளிலிருந்து வந்து பிச்சை எடுத்து விட்டு திரும்பி சென்று விடுகின்றனர். இவ்வாறு பவுர்ணமி நாட்களில் சாதுக்கள் போர்வையில் சிலர், கிரிவலம் வரும் பக்தர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு, பணம், நகை உள்ளிட்டவற்றை பறித்து செல்வதாக, பல புகார்கள் வருகின்றன. இதையடுத்து, பவுர்ணமி தினமான நேற்று வெளிப்பகுதிகளிலிருந்து வந்து பிச்சை எடுத்த சாதுக்களை அடையாளம் கண்டு, அவர்களை, திருவண்ணாமலை மேற்கு போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று போலீசார் கைரேகைகளை சேகரித்தனர். அவர்களது கைரேகைகள் குற்றவழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒத்து போகிறதா அல்லது அவர்கள் மீது வேறு ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா என, கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.