பதிவு செய்த நாள்
30
செப்
2023
06:09
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், நடந்த உண்டியல் காணிக்கை எண்ணியதில், பக்தர்கள், 24.61 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தி இருந்தனர்.
கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். இக்கோவிலில் மூன்று மாதங்களுக்கு, ஒரு முறை பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். நேற்று கோவில் வளாகத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் நடைபெற்றன. மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி தலைமையில், அரங்கநாதர் கோவில் செயல் அலுவலர் லோகநாதன், கோவில்களில் ஆய்வாளர் ஹேமலதா ஆகியோர் முன்னிலையில் உண்டியல்களில் உள்ள காணிக்கைகள் எண்ணும் பணிகள் நடைபெற்றன. கோவில் வளாகத்தில் வைத்திருந்த, 11 உண்டியல்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் பக்தர்கள், 24 லட்சத்து, 61 ஆயிரத்து, 691 ரூபாயும், 110 கிராம் தங்கமும், 224 கிராம் வெள்ளி பொருட்களும், காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இதே போன்று, மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலில், பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணும் பணிகள் நடைபெற்றன. இதில், 34 லட்சத்து, 4 ஆயிரம் ரூபாய், பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்தனர்.
உண்டியலில் மொபைல் போன் காணிக்கை; காரமடை அரங்கநாதர் கோவிலில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணிகள் நடைபெற்றன. ஒவ்வொரு உண்டியலாக திறந்து, அதில் உள்ள காணிக்கைகளை எண்ணிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு உண்டியலில் மொபைல் போனும், வாட்சும் இருந்தது. மைசூரைச் சேர்ந்த கவுசல்யா என்பவர், கடந்த மாதம் புளியம்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கிருந்து காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு வந்த இவர், சுவாமியை வழிபட்ட பின், உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளார். அப்போது கையில் வைத்திருந்த மொபைல் போன், தவறுதலாக உண்டியலில் விழுந்துள்ளது. இது குறித்து கவுசல்யா, கோயில் செயல் அலுவலரிடம் விபரங்களை கூறினார். அதற்கு செயல் அலுவலர் லோகநாதன் உண்டியல், காணிக்கை எண்ணும் போது, மொபைல் போன் தருவதாக கூறியுள்ளார். இன்று நடந்த உண்டியல் காணிக்கை எண்ணிய போது, உண்டியலில் இருந்த மொபைல் போனை எடுத்து, பதிவு செய்து, உரியவரிடம் அதன் விபரங்களை எழுதி வாங்கிய பின், ஒப்படைக்கப்பட்டது.