புரட்டாசி பொங்கல் விழாவில் புரவி எடுப்பு ; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2023 12:10
திருநகர்: மதுரை விளாச்சேரி நான்கு தேவர்கள் வகையறாக்களும், ஐந்து தெரு பொதுமக்கள் சார்பில் அழகு நாச்சியம்மன் கோயில், அய்யனார் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவை முன்னிட்டு புரவி எடுக்கும் விழா நடந்தது. நேற்று முன்தினம் கோயில் பெட்டி வீட்டிலிருந்து அம்மன் நகைகள், பூஜை பொருள்கள் பெட்டியில் வைத்து ஊர்வலமாக அழகு நாச்சியம்மன் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அழகு நாச்சியம்மனுக்கு அபிஷேகம், பூஜை முடிந்து நகைகள் சாத்துப்படி செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. இரவு சக்தி கிடாய் வெட்டுதல் நிகழ்ச்சி முடிந்து, விடிய விடிய அம்மனுக்கு பூஜைகள் நடந்தது. நேற்று மாலை பூக்குழி இறங்கும் இடம் அருகே கிராமத்தினர் சார்பில் அய்யனார் அமர்ந்த நிலையில் ஒரு குதிரையும், 11 நேர்த்திக் கடன் குதிரைகளும் களிமண்ணில் தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது. குதிரைகளுக்கு பூஜை செய்யப்பட்டு ஊர்வலமாக அக்ரஹாரம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அய்யனார், குதிரைகளுக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்பு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அய்யனார் கோயிலில் சேர்ப்பிக்கப்பட்டது.