கண்டதேவியில் ஓடாத தேர்; தேரோட்டம் எப்போது நடக்கும்.. ஏக்கத்தில் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2023 12:10
தேவகோட்டை; சிவகங்கை மாவட்டம் கண்டதேவியில் தேரோட்டம் எப்போது நடக்கும் என தேவகோட்டை சுற்று வட்டார மக்கள் ஏக்கத்தில் உள்ளனர்.
தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவியில் சிவகங்கை சமஸ்தான நிர்வாகத்தில் சிறகிழிநாதர் என்ற சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. இப்பகுதியில் உள்ள தென்னிலை நாடு, உஞ்சனை நாடு, செம்பொன்மாரி நாடு, இறகுசேரி நாடு ஆகிய நான்கு பகுதிகளை சேர்ந்த 150 கிராமத்தினருக்கு தலைமை கோயில். ஆண்டுதோறும் ஆனியில் திருவிழா நடைபெறும். அனைத்து கிராமத்தினர் பங்கேற்பர். ஆனி கேட்டை நட்சத்திரத்தில் நான்கு நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் வடம்பிடிக்க தேரோட்டம் நடைபெறும். வடம்பிடித்து இழுப்பதில் பிரச்னை காரணமாக 1998 ல் கடைசி நேரத்தில் தேரோட்டம் நின்று போனது. அதன்பின் நடக்கவில்லை. மீண்டும் ஜெயலலிதா ஆட்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 2002ல் தேரோட்டம் நடந்தது. 2006ல் மீண்டும் தேரோட்டம் நின்றது. அதன் பின் கோயிலில் கும்பாபிஷேகத்தை காரணம் காட்டி திருவிழாவும் இல்லை, தேரோட்டமும் இல்லை.
ஓடாத தேர்: 2012 ல் கும்பாபிஷேகம் நடந்தது. அந்த ஆண்டு திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும் என பக்தர்கள் எதிர்பார்த்தனர். திருவிழா நடந்தும் தேர் பழுதாகி இருப்பதாக கூறி தேரோட்டத்தை நிறுத்தப்பட்டது. சுவாமிகளை சிறிய சப்பரங்களில் வைத்து இழுத்தனர். சில ஆண்டுகளுக்கு முன் புதிய தேர் செய்யப்பட்டது. தேர் வெள்ளோட்டம் நடத்த முறைப்படி தேதிஅறிவிக்காமல் நாட்கள் சென்றுகொண்டே இருக்கின்றன. வெள்ளோட்டம் நடக்காததால் திருவிழாவில் தேரோட்டமும் இல்லை. இந்நிலையில் ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். வெள்ளோட்டம் விடும் தேதியை முடிவு செய்ய உத்தரவிடப்பட்டது. இருப்பினும் வெள்ளோட்டம் நடக்கவில்லை. மீண்டும் நீதிமன்றத்தை நாடினர். தேர் பல வருடம் ஓடாததால் ஹைட்ராலிக் பிரேக் சிஸ்டம் தேரில் பொருத்த வேண்டும் என பதில் அளிக்கப்பட்டது. மூன்று நாட்களுக்கு முன்பு ரூ. 7 லட்சம் செலவில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தும் பணியும் ஒரு வழியாக முடிவடைந்துள்ளது.
வெள்ளோட்டம் எப்போது: தேரோட்டத்திற்கு பிரச்னை செய்த பலர் பல சங்கடங்களை சந்தித்துள்ளனர். எனவே தேரோட்டம் நடக்கவேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். அனைத்து தடைகளும் விலகியுள்ள நிலையில் தேர் வெள்ளோட்டமும் திருவிழாவில் தேரோட்டமும் நடக்க வேண்டும் என பக்தர்கள் விரும்புகின்றனர். தேரோட்டம் நடந்தால் தேவகோட்டை பகுதியில் அமைதி நிலவும் என்றும், விவசாயம் சீராகும் என்றும் இப்பகுதியினர் நம்புகின்றனர்.